Monday, November 21, 2011

இந்திய துறைமுகங்களில் 2,87,000 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன்

"2020"ல், இந்தியத் துறைமுகங்கள் 2,495 மில்லியன் டன் சரக்குகளை கையாள்வதற்காக, 2 ,87,000 கோடி ரூபாயில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன'' என, மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தின் மிதவை ஆழம், பெரிய சரக்கு கப்பல்கள் வரும் வகையில், 538 கோடி ரூபாயில், 10.7 மீட்டரிலிருந்து 12.8 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை, நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்து, மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: இங்கு, மிதவை ஆழம் அதிகப்படுத்தப்பட்டதன் மூலம், ஆறு தளங்களில், 80,000 டன் கொள்ளளவு கொண்ட பெரிய "பனாமாக்ஸ்' வகை கப்பல்களைக் கையாள முடியும். இதன் மூலம், துறைமுகத்தின் கொள்ளளவு, 7.5 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில், பெரிய கப்பல்களை கையாள்வதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட துறைமுகங்களில் ஒன்றாக, இது வளர்ச்சியடைந்திருக்கிறது. இங்கிருந்து சரக்கு கப்பல்களும், சரக்குப் பெட்டகக் கப்பல்களும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் தூர தேசங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியும்.

கடல்சார் வளர்ச்சியின் மூலம், ஒரு நாட்டின் வளர்ச்சியை முடுக்கிவிட முடியுமென்பதால், கடல்சார் துறையின் வளர்ச்சிக்கு, தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2,87,000 கோடி ரூபாயில் திட்டம்: 2020ம் ஆண்டு, கிட்டத்தட்ட 2,495 மில்லியன் டன் சரக்குகளை கையாள்வதற்குத் தேவையான 3,288 மில்லியன் டன் கொள்ளளவை, இந்தியத் துறைமுகங்கள் அடைய, 2,87,000 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், 4,350 கோடி ரூபாயில் அமையவுள்ள வெளித் துறைமுகம், 14 மீட்டர் மிதவை ஆழமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நம்புகிறேன்.

தற்போது, தூர்வாரப்பட்டதன் மூலம், துறைமுகத்திற்கு, 103 ஏக்கர் நிலப்பரப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய உள்துறைமுக திட்டப்பணிகள் முடிவுற்றால், துறைமுகத்தின் கொள்ளளவு, 61.78 மில்லியன் டன்னாக உயரும். நடப்பு நிதியாண்டின் கடந்த ஆறு மாதத்தில், இத்துறைமுகம், 13.7 சதவீதம் வளர்ச்சியடைந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு அடுத்தபடியாக, பெரிய துறைமுகங்களில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது. இத்துறைமுகத்தில், 130 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அமைச்சர் வாசன் பேசினார்.

Monday, November 14, 2011

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.

இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!

Wednesday, November 9, 2011

ஊழலை ஒழிக்க வெறும் பேச்சு உதவாது: சோனியா ஆவேசம்

""வெறும் பேச்சால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது,'' என, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

காங்., தலைவர் சோனியா, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்குச் சென்று புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உரையாற்றவில்லை. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ஊழலை ஒழிக்க வழி செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். "பார்லிமென்டில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை' எனக் கூறி, சமீபத்தில் ஹிசார் லோக்சபா தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். குளிர்கால கூட்டத்தொடரில், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படா விட்டால், நடைபெற உள்ள உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக சமீபத்தில் மவுன விரதத்தை முடித்துக் கொண்ட அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர், குறிப்பாக திக்விஜய் சிங் காரசாரமாக பதிலடி கொடுத்து வருகிறார்.


இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் கவுச்சார் பகுதியில், ரிஷிகேஷ் - கரன்பிரயாக் இடையிலான ரயில்வே திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காய்ச்சல் காரணமாக, சோனியா கடைசி நேரத்தில் இந்த விழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சோனியாவின் உரையை கேட்க இப்பகுதி மக்கள் ஆர்வமாக இருந்தனர். அவர் வராவிட்டாலும் அவரது உரையை, ராணுவ அமைச்சர் அந்தோணி வாசித்தார்.


ஊழல் விவகாரத்தில், தன் மவுனத்தை கலைக்கும் விதமாக சோனியா அதில் கூறியிருந்ததாவது: சமீப காலமாக ஊழல் குறித்த பேச்சுக்கள் அதிகரித்துவிட்டன. ஊழல் ஒரு பெரிய நோய் தான். அதில் சந்தேகமேயில்லை. இதில், பலர் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உண்மை தான். ஊழலைப் பற்றி பேசிக் கொண்டேயிருந்தால், ஊழலை ஒழித்து விட முடியாது. அதற்குரிய சூழல் உருவாக வேண்டும். ஊழல், ஊழல் என்று மற்றவரை சுட்டிக் காட்டினால், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஊழல் குறித்து ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். "மற்றவர்கள் அளவுக்கு நான் ஊழல் செய்யவில்லை' என்ற அளவில் தான் தற்போதைய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.


ஊழல் குறித்து கூச்சல் போடுபவர்களை பார்த்து கேட்கிறேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது யார்? அதை நாங்கள் தான் கொண்டு வந்தோம். பிரதமரால் அமைக்கப்பட்ட தேசிய ஆலோசனை கவுன்சிலில் நானும் இருக்கிறேன். லோக்பால் மசோதா குறித்த மாதிரி, இந்த கவுன்சிலில் தான் உருவாக்கப்பட்டது. பிரதமரும், மத்திய அரசும் லோக்பால் மசோதாவை கொண்டு வருவது குறித்து உறுதியளித்துள்ளனர். அதற்கு பிறகும் ஏன் வெற்று கூச்சல் தொடருகிறது? விலைவாசி உயர்வு, பணவீக்கம் உயர்வு என்பதெல்லாம் கவலையளிக்கிறது. உண்மை தான். இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் புரிகிறது. எல்லாரும் அரசியல் நடத்தலாம். ஆனால், மக்களை பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும். மக்களுக்காக எதையாவது செய்யத்தான் வேண்டும். இவ்வாறு சோனியா கூறியுள்ளார். உத்தரகண்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னோட்ட பிரசாரமாக, சோனியாவின் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் வராததால், காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஹசாரேயை நம்பி ஏமாந்தேன்: வருந்துகிறார் காந்தியவாதி

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரேவிடம் ஒப்படைத்ததற்காக வருந்துகிறேன் என, 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உண்ணாவிரதம் இருந்த போது, அவருக்கு ஆதரவாக 94 வயதான காந்தியவாதி ஷாம்பு தத்தும், அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேரும், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர்.


இது குறித்து ஷாம்பு தத் கூறியதாவது:ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யக்கோரி நான், சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது, கிரண்பேடியும், சுவாமி அக்னிவேஷும் என்னை சந்தித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளும்படி வற்புறுத்தினர். அவர்கள் பேச்சை கேட்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன். ஆனால், இப்போது அது தவறு என்பதை உணர்கிறேன். நாங்கள் கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருப்பவர்கள்.அன்னா ஹசாரேவின் குழுவில் உள்ளவர்களிடம் ஸ்திரத் தன்மை இல்லை. அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்த நம்பகத்தன்மை போய் விட்டது. ஹசாரேவின் பிரசாரம் எல்லை மீறுவது சமீப காலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.பார்லிமென்டில் எந்த விதமாக மசோதா தாக்கல் செய்யப்படுகிறது, என்பதை பொறுத்திருந்து பார்ப்பேன். காங்கிரசை எதிர்க்கப் போவதில்லை, என்றவர், ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். நடைபெற உள்ள உ.பி., உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஹசாரேவின் இந்த நடவடிக்கை குழந்தைத் தனமானது. ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஜன் லோக்பால் மசோதா விஷயத்தில் சில பிரிவுகளில் எங்களுக்கு அவர்களுடன் உடன்பாடில்லை.


ஊழல் செய்து வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, சட்ட கமிஷன், மாதிரி சட்ட மசோதாவை, அரசுக்கு அனுப்பியது. ஆனால், இந்த விஷயத்தில் அரசு, கடந்த 12 ஆண்டுகளாக மவுனம் சாதித்து வருகிறது. முறைகேடாக சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற மசோதா, லோக்பால் மசோதாவை விட முக்கியமானது. இந்த மசோதாவை அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டும் என, சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லயென்றால், மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்குவேன்.இவ்வாறு ஷாம்பு தத் கூறினார்.


ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர்:அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதா, அன்னா ஹசாரே அணியினர் எதிர்பார்த்ததை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். இதன் காரணமாக அவர்களது செல்வாக்கு சரிந்து விடுமோ என்ற பயத்தில் தான் ஹசாரே அணியினர், காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக மிரட்டி வருகின்றனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி, யோகா குரு பாபா ராம்தேவ் போன்றவர்களின் ஊழல் எதிர்ப்பு பிரசாரம், உத்தரபிரதேசத்தில் எங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.

Monday, November 7, 2011

ஜன்லோக்பால் மசோதா குறித்த ஹசாரேவின் மதிப்பீடு மிகுதியானது: திக்விஜய் சிங்

ஜன்லோக்பால் மசோதா குறித்த ஹசாரேவின் மதிப்பீடு மிகுதியானது: திக்விஜய் சிங்

புதுதில்லி, நவ.7: ஜன்லோக்பால் மசோதா பெரிதாக சாதித்துவிடும் என அண்ணா ஹசாரே அதுகுறித்து அளவுக்கு அதிகமாக மதிப்பீடு செய்துவைத்துள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறினார்.ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாக மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. அரசு, போலீஸ், நீதித்துறை மற்றும் அரசு உயர்அதிகாரிகள் என அனைவரும் இணைந்து ஒரு செயல்திட்டத்தை வகுப்பதன்மூலமே ஊழலை ஒழிக்க முடியும் என திக்விஜய் சிங் குறிப்பிட்டார்.லோக்பால் மசோதாவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வலிமையான லோக்பால் மசோசாவை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என திக்விஜய் மேலும் தெரிவித்தார்.மேலும் ஊழலுக்கு எதிரான ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் யாத்திரையை வரவேற்கிறோம். அவருடன் யார் இருக்கப் போகிறார்கள். ஊழல் குறித்து அவர் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்கத்தான் போகிறோம் என திக்விஜய் சிங் கூறினார்.

கூடங்குளம் விஷயத்தில் அச்சம் வேண்டாம்: நேரில் ஆய்வு செய்த டாக்டர் கலாம் பேட்டி

"
"கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பில் எனக்கு முழு திருப்தியுள்ளது. கூடங்குளம் விஷயத்தில் பொதுமக்களுக்கு அச்சம் வேண்டாம்,'' என, அணுமின் நிலையத்தை ஆய்வு செய்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உறுதிபட தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் போராட்டம் நடக்கிறது. ஒரு தரப்பினரின் இந்த போராட்டத்தால், அணு மின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. "அணு உலையால் உயிருக்கே ஆபத்து' என, போராட்டக் குழு பிரதிநிதிகள் கூறுவதைக் கேட்டு, மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நேற்று காலை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்தார்.அங்கு பணிமுடிக்கப்பட்ட அணு உலை 1, 2 ஆகியவற்றை பார்வையிட்டு, விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், நிருபர்களிடம் அப்துல் கலாம் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாம் தலைமுறைக்கான அதிநவீன பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு மின்தடை ஏற்பட்டாலோ அல்லது குளிர்விப்பானில் தடை ஏற்பட்டாலோ, நீராவி மூலம் வெப்பம் குளிர்விக்கப்படும் தானியங்கி வசதி உள்ளது. இந்த வசதி, இந்தியாவிலேயே முதல்முறையாக இங்கு மட்டுமே உள்ளது. கதிர்வீச்சு அபாயமில்லை: அணுஉலையில் எரிபொருள் உருகி கீழே விழுந்தால், அதன்அடிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள தொட்டி போன்ற அமைப்பு, அந்த எரிபொருளிலிருந்து கதிரியக்கத்தை செயலிழக்கச் செய்யும். மேலும், கதிர்வீச்சு வெளியாவதை தடுப்பதற்காக, இரட்டை சுவர் முறையில் அணுஉலை நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கதிர்வீச்சு அபாயமும் இங்கில்லை. இந்த அணுஉலை பாதுகாப்பில் எனக்கு முழுதிருப்தியுள்ளது.

ஏன் பயம்? அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கும், மத்திய அரசிற்கும், இப்பிரச்னையில் சமரசம் செய்வதற்கான தூதராக நான் இங்கு வரவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்ததன் காரணமாகவே இங்கு வந்துள்ளேன். இந்த அணுமின் நிலையத்தைப் பற்றி பொதுமக்கள் பயப்படவேண்டாம். எனக்கு பயிற்றுவித்த சிவசுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட ஆசிரியர்கள், எதிலும் குறைகாணக்கூடாது என்றே கூறியுள்ளனர். பொது விஷயங்களில், அதன்படியே நான் நடக்கிறேன்.

பாதிப்பு வராது: இங்கு யுரேனியத்தில் வரும் 25 சதவீத கழிவு, கடலில் கொட்டப்படாது. உலகளவில் அணுஉலையில் இதுவரை மொத்தம் ஆறு விபத்துகள் நடந்துள்ளன. ஆனால், இந்தியாவில் ஒன்று கூட நடக்கவில்லை. ஆயினும், அதுபோலவோ அல்லது அதைவிட பெரிதாகவே விபத்து நடந்தாலும், இங்கு எந்த பாதிப்பும் வராது. ஏனெனில், கூடங்குளம் அணுமின் நிலையம், கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும், பூகம்பம் ஏற்படாத பாதுகாப்பான 2வது இடத்திலுள்ளது. இதனால், பூகம்பம், சுனாமியால் இந்த அணு மின் நிலையம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது.நெல்லை நெல்லையப்பர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதுபோலத்தான் தஞ்சை பெரியகோவிலும் கட்டப்பட்டது. அவை, இன்றும் நிலைத்து நிற்கின்றன. கடல் அலை அரிப்பால் ஆபத்து ஏற்படுமென நினைத்திருந்தால், கல்லணையை கரிகாலன் கட்டியிருக்க மாட்டார். எனவே, எல்லாவற்றிலும் நம்பிக்கைதான் நல்லது.

இங்கு என்னை சந்தித்த 15 கிராமங்களைச் சேர்ந்த 40 பேர், மின்சாரம் மிக முக்கியம். ஆகையால், இங்குமின் உற்பத்தியை விரைந்து துவக்க வேண்டும் என்றனர். நாங்கள், 1979ல் பி.எஸ்.எல்.வி., -3, ராக்கெட் தயாரித்தபோது, விபத்து ஏற்பட்டதில், எட்டு பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் என்னிடம் நிச்சயம், இந்த ராக்கெட்டை அடுத்தாண்டு விண்ணில் ஏவுவோம் என்றார். அதன்படி, ராக்கெட்டும் ஏவப்பட்டது. எனவே, நம்பிக்கை அவசியம். அதுபோல, இந்த அணுமின் நிலைய பாதுகாப்பையும் பொதுமக்கள் நம்ப வேண்டும்.புயல், சூறாவளி ஏற்பட்டாலும் இந்த அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்தாண்டு, கடைசியில் இங்கு 1,000 மெகாவாட், அடுத்த ஆறு மாதத்தில் 2,000 மெகாவாட், அடுத்தபத்து ஆண்டில் 4,000 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தத்தில், கூடங்குளத்தை அணுஉலைப் பூங்காவாக மாற்றவேண்டுமென்பது எனது விருப்பம். இவ்வாறு அப்துல் கலாம் நிருபர்களிடம் கூறினார்.

பேட்டியின் போது, இந்திய அணுசக்தி கழக தலைவர் எஸ்.கே.ஜெயின், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

ரகசியமாக வைக்கப்பட்ட கலாம் வருகை :*பாதுகாப்பு கருதி அப்துல் கலாமின் கூடங்குளம் பயணம், நிகழ்ச்சி விவரம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது
*நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு, கூடங்குளம் அணுமின் நிலைய குடியிருப்பிற்கு கலாம் வந்தார்
* நேற்று காலை சரியாக 9.30 மணியளவில், காரில் அணுமின் நிலைய வளாகத்திற்குள் நுழைந்தார். அவருடன், இந்திய அணுசக்தி கழகத்தலைவர் எஸ்.கே.ஜெயின் வந்தார்.
* அணுமின் நிலையத்தில் அதிகாரிகள், விஞ்ஞானிகளின் ஆலோசனை நடத்திவிட்டு, அணுஉலை 1, 2ஐ ஆய்வு செய்த கலாம், அணுமின் நிலைய ஆதரவாளர்களையும் சந்தித்தார்.
* அப்துல் கலாமிடம் பேட்டியெடுக்க தமிழ், ஆங்கிலம், மலையாள பத்திரிகை நிருபர்கள், "டிவி' நிருபர்கள் ஏராளமானோர் இங்கு குவிந்தனர்
*மதியம் 1.15 மணிக்கு நிருபர்களை சந்தித்த கலாம், முக்கால் மணி நேரம் பேட்டியளித்தார். அணுஉலை குறித்த நிருபர்களின் சரமாரியான கேள்விகளுக்கு, ஆசிரியர் போல் விளக்கமாக பதில் கூறினார்.
*பிரச்னை தவிர்ப்பதற்காக கூடங்குளம் அணுமின் நிலையம், சுற்றுப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* அணுஉலை ஆய்விற்கு கலாம் சென்றபோதும், அணு உலை ஆதரவாளர்கள் அவரை சந்தித்தபோதும், அதை படமெடுக்க பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

"சந்ததிகள் வாழ கூடங்குளம் அவசியம் தேவை':கலாமிடம் நிருபர் ஒருவர், ""கனவு காணுங்கள் என்கிறீர்கள். தங்களின் எதிர்கால சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டுமென்ற கனவில் தானே, போராட்டக்காரர்கள் இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கிறார்கள்,'' என, கேட்டார்.

இதற்கு பதிலளித்த கலாம்,"ஒரு விஞ்ஞானி என்ற முறையில் மின்சாரத்தின் தேவையை நன்கு அறிந்தவன் நான். எனவே, இப்பகுதி மக்களின் சந்ததிகள் சிறப்பாக வாழ இந்த அணுமின் நிலையம் அவசியம் தேவை. இங்கிருந்து, இந்தியா முழுமைக்கும் மின் சப்ளை செய்யும் நிலைமை வரவேண்டும். பொதுமக்கள் பயப்படுவதுபோல, இங்கு விபத்து நடக்காது,'' என்றார்.

அவசியம் இல்லை: மின்உற்பத்தியை துவங்க வலியுறுத்தி அணுமின் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை சந்தித்த கலாம், போராட்டக்கார்களை சந்திக்க செல்லவில்லை. இதுகுறித்து கலாமிடம் கேட்டபோது,"" இந்த அணுமின் நிலையம் குறித்து பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை. ஏனெனில், மின்தேவை நமக்கு அவசியம். அது முக்கியம். மின் உற்பத்தி துவங்க வலியுறுத்தி இங்கு என்னிடம் மனு கொடுக்க வந்தவர்களை நான் சந்தித்தேன். அதேபோல, போராட்டக்காரர்களும் இங்கு வந்தால் அவர்களையும் சந்திப்பேன். மாறாக, நான் அவர்களைத் தேடிச் சென்று சந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களின் கருத்துக்களை என்னுடைய apj@abdulkalam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்,'' என்றார்.

"இந்த அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்த என்னுடைய கருத்தை பொதுமக்களிடம் வெவ்வேறு வழிகளில் தெரிவிப்பேன். டில்லியில் நடக்கவுள்ள அணுசக்தி மாநாட்டிலும் இதுகுறித்து பேசுவேன். இந்த அணுமின் நிலையம், இப்பகுதி மக்களின் வரப்பிரசாதம். மக்களின் நல்வாழ்வுக்கு உழைப்பும், நல்லொழுக்கமுமே முக்கியம். இந்த அணுமின் நிலையத்தால் பொதுமக்களின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார். பின்னர், காரில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அவர் சென்னை சென்றார்.