Friday, January 28, 2011

மக்கள் தளபதிக்கு தினமணி பாராட்டு

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரைச் சூட்டிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்கிற செய்தி இந்திய விடுதலை வேள்வி குறித்த கேள்வி ஞானம் இல்லாதவர்களுக்கும்கூட மனங்குளிரச் செய்யும் செய்தியாக இருக்கும் என்பது உறுதி. காரணம், "கப்பலோட்டிய தமிழன்' "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரம்பிள்ளை என்பது தமிழினத்துக்கே பெருமை சேர்த்த பெயர். இந்தியர்களை அடிமைப்படுத்தி, ஆட்சி செய்த ஆங்கிலேயர்களை வ.உ.சி., இந்திய மண்ணில் வணிகம் செய்ய வந்த வியாபாரிகளாகத்தான் பார்த்தார். ஒரு வியாபாரியை எதிர்கொள்வது வியாபாரத்தால் மட்டுமே முடியும் என்று அந்த நேர்மையாளர் நம்பினார். அதன் விளைவுதான் சுதேசிக் கப்பல்! இந்நாளில் மட்டுமல்ல, அன்றைய நாளிலும்கூட கப்பல் என்பது மிகப்பெரும் மூலதனத்தை உள்வாங்கும் தொழில். இரண்டு கப்பல்களை வாங்கி, 1906-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார். இத்தகைய மிகவும் அசாத்தியமான துணிச்சல்தான் ஆங்கிலேயரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அந்த ஆத்திரத்தின் வலி, வ.உ.சி.யின் உடல் வலிகொள்ளும் அளவுக்கு கோவைச் சிறையில் செக்கிழுக்கும்படியாகச் செய்தது. சிறைத் தண்டனைகள் குறைக்கப்பட்டு அவர் வெளியே வந்தபோது, அவர் வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமம் இல்லாதவராக இருந்தார். அந்த உரிமத்தை மீண்டும் தனக்குப் பெற்றுத் தரக் காரணமாக இருந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் பெயரை தன் மகனுக்குச் சூட்டி (வாலேஸ்வரன்) நன்றிக்கடன் செலுத்திய மகான் அவர். அத்தகைய அப்பழுக்கற்ற தியாகச் சுடரின் பெயரை, பெருந்தன்மையின் அடையாளமானவரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சூட்டியிருப்பது மிகப் பொருத்தமானது. இந்த நற்செயல் எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தமிழகத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோதே செய்திருக்கலாம். அதன்பின்னர் திராவிட ஆட்சிக் காலங்களிலும் இந்தப் பெயர் சூட்டல் நடக்கவில்லை. வ.உ.சி.-க்கு மணிமண்டபம் கட்டிய தமிழக அரசும்கூட, "பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்'தான் தொடங்கியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில், கப்பல் போக்குவரத்துத் துறைக்கு தமிழர்தான் அமைச்சராக இருந்தார். அவர்கூட இப்படியொரு முடிவை எடுத்து அறிவிக்க முடியவில்லை. ஆனாலும், இப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே. வாசன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில், அவரது முயற்சியால் இது நடைபெற்றுள்ளது. காலங்கடந்து கிடைத்த பெருமை என்றாலும், பாராட்டுவோம். ""வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ! வருந்தலை, என் கேண்மைக் கோவே!...''பாரதியின் மெய்வாக்கு இது. ஆனால், அவர் விடுதலை பெற்று வெளியே வந்தபோது அத்தகைய நிலை உருவாகவில்லை. அதற்காக, தன் சமகால அரசியல் நண்பர்கள் பற்றியோ, தன்னை மறந்த மனிதர்களைப் பற்றியோ குறைகூறிப் பேசியதாக யாரும் சொல்லக் கேட்டதும் இல்லை. துயரங்கள் அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மெய்ஞானி! அவர் நினைவாகச் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கிறது. சிறைவாழ்வின்போது அவர் ஜேம்ஸ் ஆலன் என்ற அறிஞர் எழுதிய நூல்களை, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம் என்ற பெயரில் மிக அழகாக மொழிபெயர்த்தார். மனிதனின் உயர்வு, தாழ்வு இரண்டுக்குமே அடிப்படை அவனது எண்ணங்கள்தான். எண்ணங்களை மாற்றினால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் தானே மாறும் என்கிற அடிப்படையான கருத்தைக் கொண்டிருக்கும் இந்த நூல்கள் இன்றைய இளைய சமுதாயத்துக்கு மிகமிகத் தேவையானவை. மேனிலைப் பள்ளிப் பாடத்தில் தமிழ் துணைப்பாடமாக இந்த நூல்கள் இடம்பெறச் செய்தால், இளைய சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கிட முடியும். கோவையில் இப்போது மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் செம்மொழிப் பூங்கா அமையவிருப்பதால், அங்கு வ.உ.சி. இழுத்த செக்கினை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் இழுத்த செக்கு, மணிமண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டாலும், இப்போது கோவை மத்திய சிறையிலுள்ள அந்தச் சின்னம் ஓர் அடையாளம் என்பதால், அதையும் செம்மொழிப் பூங்காவின் ஒரு பகுதியாக அமைக்கலாம். தவறில்லை. அந்தச் செக்கு அங்கேயே இருக்கவும் அந்த வளாகத்தில் வ.உ.சி.யின் மிக அரிய குறள் விளக்கங்களை வைப்பதும்கூடப் பொருத்தமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, "தென்னாட்டுத் திலகர்' வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வரலாறு கட்டாயப் பாடமாக தமிழகத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் சொல்லித் தரப்பட வேண்டும். இந்திய சரித்திரத்தில் தொழிற்சங்கம் ஒன்றை நிறுவி, தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்த தேசியத் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தூத்துக்குடி "கோரல் மில்ஸ்' என்கிற நூற்பாலையில் தொழிற்சங்கம் வ.உ.சி.யால்தான் உருவாக்கப்பட்டது. "சுதேசி' இயக்கத்தின் முன்னோடி வ.உ.சி. நாம், நம்முடைய, நமக்காக என்கிற சிந்தனையை நமக்கு விதைக்க முற்பட்ட வ.உ.சி.யின் வழித்தோன்றல்களாகிய நாம் அந்நியப் பொருள்களுக்கும், அந்நியக் கலாசாரத்துக்கும், அடிமைப்பட்டுக் கிடக்க முற்படுகிறோமே, இது சரிதானா என்று சிந்திக்க வேண்டிய வேளை இது. "சுதேசி' என்கிற கப்பலில் வ.உ.சி. என்கிற மாலுமி காட்டிய வழியில் பயணிக்க நாம் முன்வருவதுதான் நாளைய இந்தியா வலிமையான இந்தியாவாக உருவாக ஒரே வழி. மத்திய அரசுக்கும், அமைச்சர் ஜி.கே. வாசனுக்கும், இந்த முடிவுக்குத் தடையேதும் ஏற்படுத்தாமல் வழிமொழிந்த தமிழக அரசுக்கும் "தினமணி' வாசகர்கள் சார்பில் நன்றிகள் பல!

மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்களுக்கு எனது கோடானு கோடி நன்றி


கப்பலோட்டிய தமிழன் வ.ஊ.சிதம்பரம் பிள்ளையின் பெயர் சூடிய மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்களுக்கு எனது கோடானு கோடி நன்றி
திருவேங்கடம் .ர

Thursday, January 27, 2011

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர்; ஜி.கே.வாசன் அறிவிப்பு


சுதந்திர போராட்ட காலத்தில் வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடியில் சுதேசி கப்பல் போக்குவரத்தை நடத்தி வந்தார். எனவே அவர் நினைவாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்ட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுசம்பந்தமாக மத்திய அரசு பரிசீலித்தது.
இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் கப்பல் போக்கு வரத்து மந்திரி ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
வ.உ.சிதம்பரனார் பெயரை தூத்துக்குடி துறை முகத்துக்கு சூட்டி இருப்பதால் மக்களிடம் தேசபக்தி, தேச ஒற்றுமையில் மறுமலர்ச்சி ஏற்படும் என நம்புவதாக ஜி.கே.வாசன் கூறினார்.

வியாபாரம்!!!

வியாபாரிகள் அரசியலுக்கு வந்தார்கள்
அரசியல் வாதிகள் வியாபாரம் செய்தார்கள்
அரசியலே வியாபாரம் ஆனது

Tuesday, January 25, 2011

இந்தியா கறுப்புப் பணத்தை வெளிக்கொணர 5 அம்ச உத்தி: பிரணாப் முகர்ஜி


கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவர 5 அம்ச உத்தியை அரசு வகுத்திருப்பதாக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.1. கறுப்புப் பணத்துக்கு எதிராக உலகளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இந்திய அரசும் சேருவது,2. கறுப்புப் பணத்தை வெளிக்கொணர உரிய சட்டங்களை இயற்றுவது,3. சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருவாயைக் கண்டுபிடிக்கவும் அவற்றைப் பறிமுதல் செய்யவும் உரிய துறைகளையும், ஏற்கெனவே உள்ள துறைகளில் புதிய பிரிவுகளையும் உருவாக்குவது,4. கறுப்புப் பணத்தை கண்டுபிடித்து கைப்பற்ற இயற்றிய சட்டங்களையும், ஏற்படுத்திய துறைகளையும் நன்கு பயன்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உரிய நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது,5. இந்தப் பணிகளை விரைவாகவும் சரியாகவும் செய்ய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உரிய பயிற்சிகளை அளிப்பது ஆகியவையே அரசின் 5 அம்ச உத்தியாகும் என்றார் பிரணாப் முகர்ஜி.கறுப்புப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடாதது ஏன்? சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தகவல்களைக் கோரிப் பெறவும் உரிய அமைப்பு ரீதியான ஏற்பாடுகளைச் செய்யாமல் வெளிநாடுகளிடமிருந்து, வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை சேமித்து வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றி கிடைத்த தகவல்களை வெளியிட முடியாது என்று முகர்ஜி விளக்கினார்.தகவல் பெற 23 நாடுகளுடன் ஒப்பந்தம்: கறுப்புப் பணம் குறித்து தகவல் பெறுவதற்காகவே, இரட்டை வரி விதிப்பை தடுக்கவும், வரி செலுத்தினார்களா என்று அறிய பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் 23 நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்று தெரிவித்தார்.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது பற்றிய தகவல்களை அறியவும் இரட்டை வரி விதிப்பை தடுக்கும் சட்டத்தின் கீழ் வராத இந்தியர்களைப் பற்றிய புள்ளி விவரங்களைச் சேகரிக்கவும் 63 நாடுகளுடன் இந்தியா பேசி வருகிறது என்றார்.சர்வதேச தரத்துக்கு ஏற்ப, இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் வகையில் 13 புதிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் நிலையில் தயாராகிவிட்டன.இந்தத் தகவல்கள் எல்லாமே, நடவடிக்கை பூர்த்தியாகும்வரை வெளியில் கசியவிடக்கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் வெளிநாடுகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.ரகசியங்களை வெளியே கசியவிடக்கூடாது என்ற நிபந்தனையை மீறி, நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் பணம் சேர்த்தவர்களின் பெயர்களை வெளியிட்டால் மேற்கொண்டு எந்தவிதத் தகவலும் நமக்கு தரப்படாமல் போகக்கூடும்.வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணம் சேர்த்தவர்கள் மீது வழக்குத் தொடரும் வகையில் ஆதாரபூர்வமாகத் தகவல்கள் கிடைத்து வழக்கு தொடரும் நிலை வந்தவுடன் அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படும்.நம் நாட்டிலும் வெளி நாடுகளிலும் கறுப்புப் பணம் எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறும் புள்ளிவிவரம் என்று ஏதும் இல்லை.கணக்கில் காட்டப்படாமல் வெளிநாடுகளில் மறைத்து வைத்திருக்கும் பணத்தை எப்படி இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவருவது என்று ஆலோசனை கூற புதிய பணிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.பாஜக குழு மதிப்பு: 2009-ல் பாரதிய ஜனதா கட்சி நியமித்த கறுப்புப்பண மதிப்பீட்டு பணிக்குழு 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் முதல் 1,40,000 கோடி அமெரிக்க டாலர்கள் வரையில் நம் நாட்டு கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டது.குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற தன்னார்வ அமைப்பு இந்த மதிப்பு 46,200 கோடி டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளது.இந்திய அரசு கடந்த 18 மாதங்களில் எடுத்த தீவிர நடவடிக்கைகளின் விளைவாக கணக்கில் காட்டப்படாத ரூ.15,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. அதே காலத்தில் சர்வதேச வரி இயக்குநரகம் எடுத்த நடவடிக்கைகள் மூலம் ரூ.34,601 கோடி வசூலானது.சரியான விலை நிர்ணயம் செய்யப்படாமல் நடந்த பண பரிமாற்றங்களை அதற்கான இயக்குநரகம் கண்டுபிடித்ததன் காரணமாக ரூ.33,784 கோடி இந்தியாவுக்கு வெளியே கடத்தப்படவிருந்தது உரிய நேரத்தில் தடுக்கப்பட்டது என்ற தகவல்களையும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்

Monday, January 17, 2011

கடல் கொள்ளையைத் தடுக்க புதிய சட்டம்: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்



கடல் கொள்ளை சம்பவங்களைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டில் 12 இந்திய சரக்கு கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. அதில் பணியாற்றிய மாலுமிகள், ஊழியர்கள் உள்பட 174 இந்தியர்களும் கடத்தப்பட்டனர். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள உலகளாவிய அளவில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் ஓர் அங்கமான சர்வதேச கடல் போக்குவரத்து கழகத்திடம் இப் பிரச்னை குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிழக்கு, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல ஏடன் வளைகுடாதான் முக்கியமான கடல்பாதை. இவ் வழியாக ஆண்டுக்கு 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்துச் செல்கின்றன. இந்தியாவிலிருந்து மாதந்தோறும் சுமார் 15 சரக்கு கப்பல்கள் கடந்துச் செல்கின்றன. இந்திய கடல்வழி வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 5.85 லட்சம் கோடி. இதில் 45 சதவீத வர்த்தகப் போக்குவரத்து ஏடன் வளைகுடா வழியாகவே நடைபெறுகிறது. இதை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமென்றால் "நன்னம்பிக்கை முனை' வழியாகச் செல்ல வேண்டும். இவ் வழியாகச் சென்றால் பயண காலம் 3 வாரங்கள் வரை கூடுதலாகும். மேலும், இந்த வழி அவ்வளவு பாதுகாப்பானதும் அல்ல. எனவே, ஏடன் வளைகுடா வழியாகச் செல்வதே சிக்கனமானது, சிறந்ததும்கூட. ஆனால், இந்தப் பகுதியில் அண்மைக்காலமாக கடல் கொள்ளைச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதை தடுக்க இந்திய கடற்படை சார்பில் அங்கு ஒரு போர்க்கப்பல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்போது, மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சரக்கு கப்பல்களுக்குப் பாதுகாப்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 போர்க்கப்பல்கள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்த போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படையும் இணைந்து செயல்படுகிறது. கடல் கொள்ளையைத் தடுக்க இந்தியா சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது என்று அமைச்சர் வாசன் தெரிவித்தார். ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் இந்திய கப்பல்களுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடற்கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமுள்ள சலாலா எல்லைக்கோட்டை ஒட்டி செல்ல வேண்டாம் என்று அனைத்து சரக்கு கப்பல் மாலுமிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏடன் வளைகுடாவில் ரோந்து சுற்றி வரும் இந்திய போர்க்கப்பலுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் கவனத்துக்கு...!

பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன் அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ, பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும், செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர் அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம். அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள் திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை. ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர் ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில், அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள் இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா? முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில் வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும் "பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர் சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது. லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல் தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு. நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளிவந்திருக்கிறது. இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம் எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க முயன்றார். ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும் என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது! கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு. கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம் தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள் நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது. முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும் சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார் முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக் கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன? முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான் கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும், "கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு வருகிறது. சினிமாவுக்கு வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும் எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?

Monday, January 10, 2011

குடும்பச் சேனல்களுக்கு கோடிகளில் விளம்பரம்

சென்னை, ஜன.9: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடர்பான விளம்பரங்கள் மூலம் முதல்வரின் குடும்பத்துக்குச் சொந்தமான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. பொதுமக்களால் இலவச சேவை என அறியப்பட்டாலும், இந்த இரு டிவிக்களில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி கட்டணம் செலுத்தியிருக்கிறது. மற்ற தனியார் சேனல்களுக்குத் தராமல் போனாலும் அரசு நிறுவனமான பொதிகை சேனலுக்கு விளம்பரம் தராதது ஆச்சர்யமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அவசரகால உதவிக்காக "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை, 2008-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும், ஜி.வி.கே. அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையமும் (இ.எம்.ஆர்.ஐ.) கையெழுத்திட்டன. மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறையுடன் இந்த சேவை இணைக்கப்பட்டுள்ளது. இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை, சென்னை மட்டுமில்லாமல் மாவட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மாரடைப்பு, பெண்களுக்கு பிரசவ வலி, சாலை விபத்துகளில் அடிபடுவோர் என எந்த இடத்தில் இருந்தாலும் "108'க்கு அழைத்தால், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. ஒருபக்கம் பொதுமக்களுக்கு இலவசமாக சேவை வழங்கிய போதிலும், "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது தொடர்பான விளம்பரங்கள் குறிப்பாக சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் கட்டணம் செலுத்தித்தான் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசு 2008 முதல் 2010 வரை காலக்கட்டங்களில் சுமார் ரூ. 1 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்: கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது. கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு? பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ""ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு, தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதுபோலத் தான் நானும். என்னுடைய சுயநலத்தில், பொது நலமும் கலந்திருக்கிறது'' என்ற "பராசக்தி' பட வசனத்தைப் போல, தமிழக அரசின் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை பொது நலமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தின் மூலம் சன் மற்றும் கலைஞர் டிவிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைப்பது என்பது குடும்ப சுயநலம்தான்'' என்கிறார் வி.சந்தானம். சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது