Thursday, December 16, 2010

மூன்று மாததிற்குள் இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: ஜி.கே.வாசன்

மூன்று மாததிற்குள் இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: ஜி.கே.வாசன்">மூன்று மாததிற்குள் இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து: ஜி.கே.வாசன்
மூன்று மாததிற்குள் இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என, மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை இன்னும் 3 மாதங்களில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன்,
தூத்துக்குடியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு முதலிலும், அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு,ம் பயணிகள் கப்பல் விடப்படும்.
இன்னும் மூன்று மாதத்திற்குள் இந்த பயணிகள் கப்பல் திட்டம் தொடங்க, கப்பல் துறை
அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது. இதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் கையெழுத்தாகும்.
தூத்துக்குடி கொழும்பு இடையே 10 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் செல்ல முடியும். விமானக் கட்டணத்தை ஒப்பிடும்போது, கப்பல் கட்டணம் குறைவாகவே இருக்கும்.
இந்தியா இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை பலப்படுத்தும் என்றார்

G.K. Vasan meets Norwegian Minister for Indo-Norway bilateral relationship


Mr. G.K. Vasan, Union Minister of Shipping, held a wide ranging discussions recently with a visiting Norwegian delegation headed by the Minister of Trade and Industry, Mr. Trond Giske in Delhi on bilateral co-operation in the maritime sector.
The two sides discussed maritime issues that would form part of the proposed Free Trade Agreement (FTA) between India and countries of the European Free Trade Association. The discussions covered various aspects like vessel certification, qualification and identity documents of seafarers, co-operation in personnel training, labour disputes, maritime accidents, etc.
It was agreed upon by both sides to establish a Joint Working Group (JWG) under the Indo-Norwegian Joint Commission. The terms of reference of the JWG, inter alia, include discussions on co-operation in shipping, shipbuilding, maritime training and education, development and application of green technology in the shipping sector and development of design and technology for installation of offshore wind energy systems.
It is expected that today’s discussions between the two Ministers would lead to enhanced maritime co-operation and improved trade relations between the two countries.

Wednesday, December 15, 2010

“ராஜீவ்காந்தியை கொலை செய்தது மிகப் பெரிய தவறு” விடுதலைப்புலிகள் மீது கருணா கடும் தாக்கு

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கமாண்டராகவும் இருந்தார்.

பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். தற்போது அவர் இலங்கை அரசின் மறு சீரமைப்பு துறை துணை மந்திரியாக உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இறுதி கட்ட போரின் போது நடந்த உண்மைகளை கண்டறியும் குழுவையும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு சீரமைக்க கமிஷனையும் இலங்கை அரசு அமைத்துள்ளது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுலைப்புலிகள் கொலை செய்தது மிகப்பெரிய தவறு. அதுதான் அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. அவரது கொலையை தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்தது.
கடந்த 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், அமைதிநிலை ஏற்படவில்லை. மாறாக ராணுவ பலவீனத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
மேலும், நார்வே அரசு மற்றும் தமிழர்மறுவாழ்வு அமைப்பு போன்ற தமிழ் அமைப்புகள் நன்கொடையாக வழங்கிய பணத்தை ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, மைனாரிட்டியாக வாழும் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணவேண்டும். அதே நேரத்தில் மகாண கவுன்சிலுக்கு போலீஸ் அதிகாரம் தேவையில்லை. அது மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் மத்தியில் ஐயப்பாட்டை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்

முதலமைச்சர்கள்-அன்றும் இன்றும்

முதலமைச்சர்கள்-அன்றும் இன்றும்
First Published : 15 Dec 2010 12:03:00 AM IST


இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி). அதற்குப் பிறகு அவர் பண்டித நேருவின் அமைச்சரவையில் பணியாற்றினார். வங்காளத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். ஓய்வு எடுத்துக்கொண்ட நிலையில் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஆந்திரம், கர்நாடகம், கேரள மாநிலத்தின் பகுதிகள் அடங்கிய சென்னை ராஜதானியின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சென்னை தியாகராய நகர் பசுல்லா சாலையில்தான் அவரது வீடு இருந்தது. மிகவும் குறுகலானது மட்டுமல்ல, சிறியதும்கூட. பெருந்தலைவர் காமராஜ் தமிழக முதல்வராக அப்பழுக்கற்ற ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து ஒருமுறைக்கு இரண்டு முறை இந்தியாவின் பிரதமரைத் தேர்ந்தெடுத்தவர். அவர் வாழ்ந்த வீடு திருமலைப்பிள்ளை சாலையில் இப்போதும் நினைவு இல்லமாக இருக்கிறது. அது அவருக்குச் சொந்தமானதல்ல. வாடகை வீடுதான். இவரது மறைவுக்கு முன்பு அவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் வீட்டைக் காலி செய்யும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர் இறந்த பிறகு அந்த வீட்டை எம்.ஜி.ஆர். ஆட்சியில் விலை கொடுத்து வாங்கி, காமராஜின் நினைவாலயமாக்கினார். அவர் வாழ்ந்த வீடு மிகவும் சிறியது. அந்த வீட்டில் இருந்துகொண்டுதான், உலகத் தலைவர்களையும், இந்தியத் தலைவர்களையும் சந்தித்தார். அவரைச் சந்தித்த தலைவர்கள் பெருமைப்பட்டார்களே தவிர, அவரது வீடு சிறியது என்று எண்ணிக் கவலைப்படவில்லை. முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் வீடும் சிறியதுதான். அந்த வீட்டில் இருந்து கொண்டுதான் ஆட்சியும் நடத்தினார், தன்னைப் பார்க்க வந்த அனைத்துத் தலைவர்களையும் (அண்ணா, கருணாநிதி) உள்பட அவர் இருந்த சிறிய வீட்டில்தான் சந்தித்தார். காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கு சென்னையில் வீடே இருக்கவில்லை.÷பிரதமர் பண்டித நேருவின் மறைவுக்குப் பிறகு இந்திரா காந்திக்குத் தம் பிள்ளைகள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியுடன் வசிப்பதற்கு தில்லியில் சொந்த வீடு கிடையாது. மோதிலால் நேருவால் கட்டப்பட்டு, பரம்பரை உரிமையாகத் தனக்குக் கிடைத்த அலாகாபாதிலுள்ள ஆனந்தபவனத்தையும் இந்திய அரசுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு, அரசு வீட்டில்தான் கடைசிவரை வாடகைக்கு வாழ்ந்தவர் இந்திரா அம்மையார். இந்த நிலையில் நம்முடைய முதலமைச்சர் தாம் வசிக்கிற வீடு, (கோபாலபுரம், சி.ஐ.டி. நகர்), குறைந்தபட்ச வசதிகள்கூட இல்லாதது என்று வேதனைப்படுவது புரிகிறது. அவரைவிட எளிமையாக வாழ்ந்த முதலமைச்சர்கள் அந்தக் குறையை வெளிப்படுத்தியதில்லை. எனவே, தான் வாழ்கிற வீட்டின் வசதி குறைவு எனக் கருதி நமது முதலமைச்சர் வேதனைப்படத் தேவையில்லை. முதலமைச்சர், தான் ஏதோ சல்லிக்காசுகூட இல்லாமல் சென்னைக்கு வந்ததுபோல் எழுதுவதாகவும், தான் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும், அன்றைக்கே திருக்குவளையில் அல்லாமல் திருவாரூரில் தங்கிப் படித்ததாகவும் எழுதுகிறார். தம் வீட்டில் திருடன் புகும் அளவுக்கு வசதி இருந்தது என்கிறார். அவரை எவரும் குறைத்து மதிப்பிடவில்லை. சென்னைக்கு வரும்பொழுது அவர் திருட்டு ரயில் ஏறி வந்ததாக அவரும், அவரைச் சார்ந்தவர்களும்தான் மேடையில் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். அதன்மூலம் தாங்கள் ஏழை எளியவர்கள், சாமானியர்கள் என்று மக்கள் மனதில் அனுதாபம் ஏற்படுத்த முயற்சித்தார்கள். எனவே, அவரைப் பற்றி யாராவது வசதி இல்லாதவர் என்று சொல்லியிருந்தால் அதற்கு அவரும் அவரைச் சேர்ந்தவர்களும்தான் காரணம். திரைப்படத் துறையில் எப்படியெல்லாம் முன்னேறினேன் என்று விரிவாகச் சொல்லி இருக்கிறார். ஏனோ அவர் ஈரோட்டில் தங்கி, தந்தை பெரியாரின் விடுதலை நாளிதழில் பணியாற்றி ஊதியம் பெற்றதைச் சொல்லத் தவறிவிட்டார். அவருடைய ஆழ்ந்த தமிழ் அறிவையோ, சொல்லாற்றலையோ, எழுத்து வன்மையையோ இதுவரை எவரும் கேலி செய்ததும் இல்லை, எள்ளி நகையாடியதும் இல்லை. அவர் படிப்படியாகத் திரைப்படத் துறையில் முன்னுக்கு வந்தவர், மற்றவர்களைவிட அதிகம் ஊதியம் பெற்றவர். கூட்டாகச் சேர்ந்து சினிமாப் படம் தயாரித்து நஷ்டப்பட்டவர். சம்பாதிக்கவும் செய்தவர். திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்குள் புகுந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்ற பிறகு அறிஞர் அண்ணா, சினிமாத் துறையை விட்டுத் தானாக விலகிவிட்டார். எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன பிறகு மிகப்பெரிய அளவில் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்த நடிப்புத் துறையைவிட்டுத் தாமாக ஒதுங்கிவிட்டார். முதலமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்பே ஜெ. ஜெயலலிதா நடிப்புத் துறையைவிட்டு விலகிவிட்டார். ஆனாலும் கருணாநிதி முதலமைச்சர் பதவியையும், திரைப்படத் துறையையும் இப்போதும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட ஊதியம் மற்ற எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படவில்லை என்பதை அவர் உணரவில்லை. முதலமைச்சராக கதைவசனம் எழுத ஆரம்பித்த பிறகு அவருக்குக் கிடைத்த ஊதியம் பல லட்சம் (|25 லட்சம் முதல் 50 லட்சம்) வரை உயர்ந்தது. அவரோடு ஒப்பிட முடியாத அளவுக்கு மற்ற எழுத்தாளர்கள் குறைந்த ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தத் திரைப்படங்கள் வலிந்து ஓட்டப்படுகின்றன. ஓடுவதாகத் தெரியவில்லை. ஆனாலும், தொடர்ந்து அவரை வைத்துப் படமெடுத்து நஷ்டப்படத் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களே, ஏன்? இவருக்குப் பல லட்சங்களை அள்ளிவீச வரிசையில் நிற்கிறார்களே, ஏன்? இவர் முதலமைச்சர் என்பதால்தானே? அவர் பல லட்சம் பெற்றுக்கொண்டு எழுதிய வசனம் எவருடைய மனதிலும் இன்று நிலைத்து நிற்கவில்லை. அவர் சில நூறுகள், சில ஆயிரங்கள் வாங்கிக்கொண்டு எழுதிய கதை வசனம் இன்னும் பார்த்தவர்கள் மனதில் பசுமையாக நிழலாடுகிறது. படம் எடுப்பவர்களுக்கும் இது தெரியும். முதலமைச்சர் தான் திரைப்படத்துக்கு வசனம் எழுத எவ்வளவு பணம் வாங்குகிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைவிட, ஏன் அவர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கோபாலபுரம் வீட்டைப் பற்றி இந்த ஒரே வீடுதான் என்னுடையது, அதுவும் எனக்குப் பிறகு மருத்துவமனைக்குத் தானம் கொடுத்துவிட்டேன் என்கிறார். இன்று கோபாலபுரம் கருணாநிதிபுரமாக மாறிவிட்டது. அவர் வீட்டின் பின்புறம் பற்றி சட்டமன்றத்தில் பிரச்னை எழுந்ததை அவர் மறந்துவிட்டார். முரசொலி பத்திரிகை, துணைப் பத்திரிகைகளை எவ்வளவு சிரமங்களுக்கிடையே நடத்தி வந்தேன் என்று சொல்கிறார். ஆனால், அந்த முரசொலி பத்திரிகை படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துபோன நிலையில் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நிதி சேர்த்ததை மறந்திருக்க மாட்டார். இன்றைக்கு அவர் சன் தொலைக்காட்சி நிறுவனம் தனக்கு நூறு கோடி பிரித்துக் கொடுத்ததைச் சொல்லியிருக்கிறார். ஆனால், சன் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கியபொழுது அதன் நிலை என்ன? யாருடைய ஆதரவில் வளர்ந்தது? இவரும், இவரது அரசும் ஆதரவு அளித்து அதை வளர்க்கவில்லையா? ஒரு காலகட்டத்தில் அது தமிழக அரசின் செல்லப்பிள்ளையாக வலம்வரவில்லையா? சன் தொலைக்காட்சி நிறுவனம் நூறு கோடி ரூபாய் அவருக்குப் பிரித்துக் கொடுத்துள்ளது. ஆனால், அதில் அவருடைய முதலீடு எவ்வளவு என்பதைச் சொல்லவில்லை. அவர் துணைவியாருக்கு எவ்வளவு பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பதைச் சொல்லவில்லை. மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதைப் பற்றியும் சொல்லவில்லை. அவரே சம்பாதித்த பணத்தை வங்கிகளில் வைத்து ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவி செய்ய அறக்கட்டளை அமைத்து இருப்பதாகச் சொல்கிறார். அதில் எவ்வளவு பணத்துக்கு வருமானத் துறை விலக்களித்தது என்று சொல்லவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும், ஆட்சிக்கு வந்த பின்பும் திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் கட்சியை விமர்சித்தபோதெல்லாம் காங்கிரஸ் கட்சியிலிருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார், குன்னியூர் சாம்பசிவ ஐயர், வலிவலம் தேசிகர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் ஆகிய பெரும் நிலம் படைத்தவர்களின் கட்சிதான் காங்கிரஸ் கட்சி என்றார்கள். இவர்களுக்காகவே காங்கிரஸ் கட்சி நில உச்சவரம்புச் சட்டம் கொண்டுவராமல் தவிர்க்கிறது என்று சொன்னார்கள். ஏன் முதல்வர் கருணாநிதியே பல மேடைகளில் பேசினார். இன்றைக்கு அந்த பெரும் நிலச் சுவான்தார்கள் அத்தனைபேர் நிலப்பரப்பையும் ஒருசேர கூட்டினால் எத்தனை ஏக்கர் நிலம் வருமோ அதைவிட அதிகமாக அவருடைய குடும்பத்தினர் எஸ்டேட்டுகளையும், நிலத்தையும் வாங்கி வைத்திருக்கிறார்களா இல்லையா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு நில உச்சவரம்புச் சட்டம் என்ன ஆயிற்று? மிகப் பெரிதாக விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக்கொண்டு சட்டமன்றத்தின் முன்வைத்த நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்ட முன்வடிவு என்ன ஆயிற்று? அந்தச் சட்ட முன்வடிவு யாருக்காகக் கைவிடப்பட்டது என்பதை முதலமைச்சர் விளக்குவாரா? குறைந்தபட்சம் அந்தச் சட்ட முன்வடிவில் குறிப்பிட்டிருந்ததைவிட பல மடங்கு அதிக நிலத்தை சென்னை மாநகராட்சி எல்லையிலும் மற்ற மாநகராட்சி எல்லைகளிலும் அவர் குடும்பத்தினர் வைத்திருப்பதை இல்லை என்று சொல்வாரா? எதையெதையோ தம்முடைய சொந்தக் கணக்கோடு சேர்த்து எழுதியிருக்கும் முதலமைச்சர் கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கொலைவழக்கில் சிக்கினார் என்பது தெரிந்தவுடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.சென்னை மாநகராட்சி ஊழலில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர்களை உடனே கட்சியை விட்டு விலக்கினார். இன்றைக்கு கருணாநிதி ஈரோடு மாவட்டத்தில் பல கிரிமினல் வழக்கில் சிக்கிய எஸ்.கே.கே.பி. ராஜாவை என்ன செய்துள்ளார்? உலகையே வியக்கவைத்த ஊழலுக்குக் காரணமான ராசாவை எப்படி கட்டி அணைக்கிறார் என்பதைப் பார்த்து ஊர் சிரிக்கிறது.இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அவர்களுக்கு வந்த பணத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச் செலுத்திவிட்டு, தங்களுக்குத் தேவையான ஆடை மற்றும் மளிகைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்குச் சீட்டு அனுப்பிப் பெற்றுக் கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.பெருந்தலைவர் காமராஜ் பதவியில் இருந்தபோது, அவர் பெற்ற ஊதியத்தையும் பொது நிகழ்ச்சிக்குச் செல்லும்பொழுது மாலைக்குப் பதிலாகக் கொடுத்த பணத்தையும் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பிவைத்தார். புதிய ஆடைகள் வேண்டுமென்றாலும், மளிகைப் பொருள்கள் வேண்டுமென்றாலும் அவரது பணியாளர் மறைந்த வைரவனிடம் சொல்லி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் பெற்றுக் கொள்வார். ஆனால், தனிநபர் கருணாநிதியின் குடும்பச் சொத்து மதிப்பீடு பல ஆயிரம் கோடி என்பதை மறுக்க முடியுமா? ஒரு விரலால் மற்றவர்களைக் குற்றம்சாட்டும்போது, மீதி நான்கு விரல்கள் அவரைச் சுட்டிக்காட்டுவதை முதல்வர் கருணாநிதி ஏனோ மறந்துவிடுகிறார். அவரைச் சாமானியன் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. கோடீஸ்வரர் என்று சொன்னாலும் கோபம் வருகிறது. பிறகு இவரை எப்படித்தான் வர்ணிப்பது? ஆனாலும், இவர் தன்னை ராஜாஜியுடனும், காமராஜுடனும், அண்ணாவுடனும் ஒப்பிட்டுப் பேச நினைப்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை...

Sunday, December 12, 2010

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஜனநாயக விரோதம்: வாசன்


அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுவரும் நாடாளுமன்றத்தை முடக்கும் நடவடிக்கை ஜனநாயக விரோதம் எனக் குற்றஞ்சாட்டினார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன். புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: ""இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக தேசத்தின் மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பான பாராளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாராகவே இருக்கிறது. பல முறை இதை பிரதமர் மன்மோகன்சிங்கும் எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற மத்திய நிதி அமைச்சர் பிரணப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளிடம் தெரிவித்துவிட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் மக்களவை, மாநிலங்களவையை மதித்து நடக்க அவர்கள் தயாராக இல்லை. பிரச்னைகுறித்து பேசுவும் விவாதிப்பதற்கும் உரிய முடிவுகள் எடுப்பதற்கும் உள்ள மக்கள் மன்றம் அது. ஆனால், இந்தப் பிரச்னை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. பாராளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவதிலேயே அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இந்தப் பிரச்னை தொடர்பாக எதிர்க்கட்சி மூத்த உறுப்பினர் தலைமையில் பாராளுமன்றச் செயலாக்க (பி.ஏ.சி.) விசாரணை நடத்தப்படுகிறது. மத்தியப் புனாய்வுத் துறை விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை விசாரணை மேற்கொள்ளும் எனவும் 4 வாரத்திற்குள் அந்த விசாரணையின் முடிவைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வளவுக்கும் பிறகு எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் தொடர்ந்து நடத்தவிடாமல் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணித்தது வரும் நிலைப்பாடு ஜனநாயக விரோதம்'' என்றார் வாசன். பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் தி. புஷ்பராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சி. சாமிநாதன், ஜெ. முஹம்மதுகனி, நகர்மன்ற உறுப்பினர் ஜி. ஆறுமுகம், நிர்வாகிகள் வயி.ச. வெங்கடாசலம், கூகூர் சண்முகம், பூமாராமசாமி, ஆர்.எல். தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வல்லரசாகும் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை: அடுத்த பத்தாண்டு - ஒரு பார்வை












இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த மாதம். மூன்று அயல்நாட்டுத் தலைவர்கள் இம்மாதத்தில் இந்தியப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அவர்களில், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி சமீபத்தில் வந்து சென்றார். வரவிருக்கும் மற்ற இருவர், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ. கடந்த நவம்பர் மாதம் தான் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். .நா., பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகளில், நான்கு நாட்டுத் தலைவர்கள் இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து இந்தியப் பயணம் மேற்கொண்ட சம்பவம் சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்தது கிடையாது. இந்த நான்கு நாட்டுத் தலைவர்கள் முன்பும் இதுவரை இல்லாத அளவிற்கு உள்ள கோரிக்கைகளில் முக்கியமானது, .நா., பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதுதான்.

இது வரையிலான காலகட்டங்களில் இந்தியா பற்றிய கண்ணோட்டம் உலகளாவிய நிலையில் எவ்விதம் மாறியிருக்கிறது என்பதையும், இனி வருங்காலத்தில் உலகம் எவ்விதம் இந்தியாவைப் பார்க்கப் போகிறது என்பதையும் இந்தக் கோரிக்கை நமக்குக் காட்டுகிறது. சந்தேகம் இல்லாமல், இந்திய வெளியுறவுக் கொள்கையில் இதை ஒரு மாபெரும் வெற்றி என்று அடித்துக் கூறலாம். அதேநேரம், இந்த வெற்றி, இன்றியமையாத சவால்களும், கடினமான சுமைகளும் நம் முன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த சவால்களையும் சுமைகளையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா? வேகமாக மாறி வரும் உலகில், இந்தியா ஒரு புதிய இடத்தைப் பெற்றுள்ளதைப் பற்றி இந்த தலைவர்களின் வருகை எப்படி சுட்டிக்காட்டியுள்ளது என்பதை நாம் முதலில் பார்ப்போம்.


பழைய வல்லரசுகளும், பொருளாதார சிக்கலும்: ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இடம் பெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களில், பிரிட்டனும், பிரான்சும் கடந்த காலத்தில் வல்லரசுகளாகத் திகழ்ந்தவை என்பது தெளிவு. அவற்றின் பொருளாதாரம் சுருங்கத் துவங்கி விட்டது. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் 10 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதே நிலைமைதான். ஜெர்மனியின் பொருளாதாரம் மட்டும் இப்போதும் ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருக்கிறது. பிரான்ஸ் அதிபர் சர்கோசி மீது அந்நாட்டினரிடையே வெறுப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில் அவரது இந்தியப் பயணம் அவருக்கு ஒரு விளம்பரத்தைத் தேடித் தந்திருக்கிறது என்பது ஒன்றும் ஆச்சரியப்படத் தக்கதல்ல. ஆனால், இந்த விளம்பரமும் அவரது கவர்ச்சிகரமான மனைவியால் வந்தது;வெளியுறவுக் கொள்கையால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய - ரஷ்ய உறவு: சோவியத் யூனியன் சிதறுண்ட பின், உலக விவகாரங்களில் ரஷ்யாவின் முக்கியத்துவம் குறிப்பிடத் தக்க அளவில் சரிந்தது. நீண்ட காலமாக வல்லரசாக இல்லாத ரஷ்யா, தன் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கிடையில் மாறி வரும் உலகில் தனக்கு ஒரு புதிய இடத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ரஷ்ய அதிபர் மெட்வடேவ் மற்றும் பிரதமர் விளாடிமிர் புடின் (இவரே மீண்டும் அதிபராகக் கூடும்) இருவர் முன்பும் ஒரு மாபெரும் சவால் உள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஏற்றுமதியை மட்டுமே பெருமளவில் நம்பியுள்ள ரஷ்யப் பொருளாதாரத்தில், உற்பத்தித் துறை இன்னும் மந்தமாகவே உள்ளது. எனவே ரஷ்யப் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதுதான் அவர்களின் முன் உள்ள சவால்.


மெட்வடேவ், கடந்தாண்டு ஆற்றிய பார்லிமென்ட் உரையில்,"நமது உற்பத்தித் துறையை நாம் நவீனப்படுத்தத் துவங்க வேண்டும். அதேநேரம் தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்த்த வேண்டும். இன்றைய உலகில் நம் நாடு வாழ்வதற்கு பிரச்னையாக உள்ளது இதுதான்' என்று குறிப்பிட்டார். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா உடனான இந்திய உறவு முற்றிலுமாக மாறியிருக்கிறது. நமது நம்பிக்கைக்குரிய, அரசியல் ரீதியிலான நட்பு நாடாக ரஷ்யா இருந்த போதும், உலகளவிலான நமது பொருளாதார உறவுகளில் ரஷ்ய உறவின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. மாறாக சீனாவுடனான நமது பொருளாதார உறவு குறுகிய காலத்தில் குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்துள்ளது.


கடந்த 2000ல், சீனா மற்றும் ரஷ்யாவுடனான இந்திய வர்த்தகம், தலா 3 பில்லியன் டாலர். இந்தாண்டில் மட்டும் இந்திய-சீன வர்த்தகம் 60 பில்லியன் டாலர். 2015ம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகம் 120 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, இந்திய-ரஷ்ய வர்த்தகம் 10 பில்லியன் டாலர் தான். இதுவே 2015ல் வெறும் 20 பில்லியன் டாலராக மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவுடனான வர்த்தகத்தில் சீனா பெரிய பங்கு வகித்து வருகிறது. இன்றைய உலகில் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில், அது பிற உலக நாடுகளுடன் கொள்ளும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள், சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனினும் நாம் ரஷ்யாவைப் புறக்கணிக்க முடியாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா, அமெரிக்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியது. ரஷ்யாவுக்குள் ஐந்து இந்தியாக்களை வைத்து விடலாம். இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத நாடு. எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்தியாவின் மின்சார உற்பத்தி பாதுகாப்புக்கு ரஷ்யாவின் உதவி இன்றியமையாதது.


தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 9,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் உடைய அணு உலை, மேம்பட்டு வரும் இந்திய-ரஷ்ய உறவுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மாறாக, இந்தியாவில் ஒரு அணு உலை கட்டக் கூட அமெரிக்கா ஆர்வத்துடன் முன்வரவில்லை. இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு, இந்தியப் பார்லிமென்ட்டில் பெருத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. அதேநேரம், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் உள்ள "சகாலின்' தீவில், இந்திய அரசின் "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன்' (ஓ.என்.ஜி.சி.,) ரஷ்ய அரசுடன் இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கண்டறியும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.


இந்திய - அமெரிக்க உறவு: அமெரிக்கா உடனான இந்திய உறவில் குறிப்பிடத் தக்க மாற்றம் நிகழ்ந்தது இந்தாண்டில்தான். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை பற்றிய இந்தியர்களின் கண்ணோட்டம் தெளிவாக இருந்தது. "வீழ்ந்து கொண்டிருக்கும் வல்லரசு அமெரிக்கா ; இந்தியா உலகரங்கில் எழுச்சி பெறும் ஒரு வல்லரசாக இருப்பதால் தான் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தார் ' என்பதுதான் ஒபாமாவின் இந்திய வருகை பற்றிய இந்தியர்களின் தெளிவான கண்ணோட்டமாக இருந்தது. அமெரிக்கா உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் அமெரிக்காவில் கொஞ்சம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான், ஒபாமா இந்தியா வந்தார் என்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொண்டனர்.


ஒரு காலத்தில் வலிமையான நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 10 அமெரிக்கர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார். சராசரி அமெரிக்கனின் சேமிப்பு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. மலை போல கடன் சுமை அந்நாட்டை அழுத்திக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் தற்போதைய கடன் 13.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி). கடன் வாங்கும் தொகையில் பெரும்பகுதியை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா வீணாக செலவழித்துள்ளது. அமெரிக்க உதவி, இந்தியாவுக்குத் தேவை என்பதை விட, மிக அதிகளவில் இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவை என்பதை முதன் முறையாக, அமெரிக்க கொள்கை நிபுணர்கள் மற்றும் மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.


கடந்த செப்டம்பரில், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் நடத்திய ஓர் ஆய்வு, உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாமிடத்தில் இந்தியா இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் உலக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியாவை உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த நாடு என, இப்போது அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்புதல் தான், கடந்த 10,15 ஆண்டுகளில் உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசை முறை மாறி வருகிறது என்பதையும், இந்தியாவும் தன்னளவில் பெரும் மாறுதலுக்குட்பட்டிருக்கிறது என்பதையும் நமக்குக் காட்டுகிறது.


இந்திய - சீன உறவு: வரவிருக்கும் அடுத்த பத்தாண்டுகளில், உலகின் பிற எந்த நாடுகளையும் விட, இந்தியாவும் சீனாவும் தான் புதிய ஆதிக்க சக்திகளாக பரிணமிக்கப் போகின்றன. இதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கை முன்பு உள்ள மிகப்பெரிய சவால். இந்திய-சீன உறவுகள், அடுத்து வரும் பல ஆண்டுகளை எப்படி வழிநடத்தப் போகின்றன? "இரு நாடுகளும் ஆசியாவின் முதலிடத்துக்குப் போட்டியிடுகின்றன. அதனால் விரைவில் அல்லது சிறிது தாமதித்து இரு நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்படும்' என்று காட்ட மேற்கத்திய நிபுணர்கள் சிரமப்பட்டு முயல்கின்றனர். இரு தரப்பிலும் அவநம்பிக்கை நிலவுவதாக மற்றொரு கருத்து நிலவுகிறது. மேற்கத்திய கருத்தும், நமது முன்முடிவும் முற்றிலும் தவறானது என்றே நான் கருதுகிறேன். ஆம்., எதிர்காலத்தில், வளமான சக்தி வாய்ந்த நாடுகளாக உலகில் திகழப் போகும் இருநாடுகளும் தம்முள் நட்புறவையும், கூட்டுறவையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது முடியும் என்பது மட்டுமல்ல, தேவையும் கூட.


இருநாடுகளும், சமூகம் மற்றும் பொருளாதாரத் துறையில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி நமக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைப் பற்றி சிறிதளவு இங்கு பார்ப்போம். நமது மொத்த மக்கள் தொகையில், கால் பகுதியினரின் வாழ்வை இருட்டில் வைத்திருக்கும் மோசமான வறுமையை நாம் பூண்டோடு அழித்தாக வேண்டும். சமூக மற்றும் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டும். பெருகி வரும் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஏழை-பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றுக் கொள்ளவே முடியாத பிளவை குறைக்க வேண்டும்.


இறுதியாக, அதேநேரம் மிக முக்கியமாக, நமது சுற்றுச்சூழலை நாம் பாதுகாக்க வேண்டும். உண்மையிலேயே, பொருளாதார வளர்ச்சியால் தான், சுற்றுச்சூழல் மோசமான அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில், மிக முனைப்போடு ஈடுபட்டுள்ள சீனாவும் இதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும், பிரச்னைக்குரிய எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இந்தச் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.


குறிப்பாக, நட்பு மற்றும் நல்லுறவால் அடையாளப்படுத்தப்பட்ட இந்திய-சீன பண்பாட்டு உறவில், முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும், 1962 காலத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை இருநாட்டு மக்களும் மறந்து விட வேண்டும். கடந்த 2003ல் அப்போதைய இந்திய ராணுவ அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவுக்குச் சென்ற போது, உலகளவில் பிரபலமானவரும் சீனப் பிரதமருமான வென் ஜியாபோ அவரிடம்,"கடந்த 2,200 ஆண்டுக்கால சீன-இந்திய உறவில் 99.99 சதவீதம் நட்பு பதிவாகியிருக்கிறது. 0.01 சதவீதம் மட்டுமே தவறான புரிதல் பதிவாகியுள்ளது. அந்தத் தவறான புரிதலைப் புதைத்து விட்டு, நட்பை விதைக்க வேண்டிய காலகட்டம் இது' என்று கூறியதை இங்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். வென் ஜியாபோவும், நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த 6 ஆண்டுகளில், பத்து முறை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு டில்லி அல்லது பீஜிங் அல்லது சர்வதேசக் கூட்டம் ஏதாவது ஒன்றில் நடந்திருக்கலாம். இந்தியா-சீனாவுக்கிடையே அடிக்கடி நடக்கும் இந்த உயர்மட்ட சந்திப்பும் பேச்சுவார்த்தைகளும் இருதரப்பு உறவுக்கான நல்ல சகுனம் என்றே தோன்றுகிறது. அதேநேரம், இருதரப்பு மக்களுக்கிடையே, கலாசாரம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆன்மிகம் போன்ற துறைகளில் உள்ள தொடர்பு விரிவடைய வேண்டும். சீனாவில் "யோகா' வேகமாகப் பரவி வருவது நல்ல அறிகுறி.


ஐ.நா.,வைக் கடந்து...: ஐ.நா., பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களைத் தாண்டியும் இந்திய வெளியுறவுக் கொள்கை செயல்பட வேண்டும். உலகரங்கில் வலிமை பொருந்திய புதிய நாடுகள் வளர்ந்து வருகின்றன. அவற்றுடனான உறவுகளில் இந்தியா குறைந்தளவு மட்டுமே ஆர்வம் காட்டி அவற்றை புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடனும் இந்தியா தனது உறவை மேம்படுத்த வேண்டும்.


"கிழக்கு பார்வைக் கொள்கை': நமது வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய பகுதியான "கிழக்கு பார்வைக் கொள்கை' தான், தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் நம்மை நெருங்க வைக்கும். இக்கொள்கையை இந்தியா மேலும் விரிவுபடுத்தி துரிதப்படுத்த வேண்டும். வியட்நாம், கம்போடியா, லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் முற்காலத்தில் தமிழர்கள் கலாசார மற்றும் வர்த்தக ரீதியில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இங்கு நினைவு கூர்தல் அவசியம். இந்திய நாகரிகமும், ஆன்மிகத் தாக்கமும், புத்த மதத்தின் வழியாக, ஜப்பான் மற்றும் கொரியாவைச் சென்றடைந்தன. இந்தத் தொன்மையான உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதன் மூலம் நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் குறிக்கோளை நாம் அடைய முடியும்.


அண்டை நாடுகளுடன்...: நமது நெருங்கிய அண்டை நாடுகளுடனான உறவையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காத வரை, இருதரப்பு உறவுகளும் சீரடையாது. வங்கதேச- இந்திய உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகளை வங்கதேசம் முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானுடனான நமது உறவை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். நமது நெருங்கிய அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வருவதில், நமது ஒத்துழைப்பை பிற நாடுகளுக்கு அளிக்க வேண்டும். இந்திய செல்வாக்கில் இருந்து விடுபட விரும்பும் பல்வேறு சக்திகளின் கைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேபாளத்தை நோக்கியும் நம் பார்வை திரும்ப வேண்டும்.


புவியியல், ஆன்மிகம் மற்றும் மொழியியல் ரீதியில் இலங்கை உடனான நமது உறவு, பொருளாதார தொடர்பையும் கடந்து ஆக்கப்பூர்வமாக வலுப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவை இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களும் பயன்பெறுவர் என்ற எண்ணம் அவர்களிடம் உருவாக வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தில் வளத்தையும் இணக்கத்தையும் கொண்டு வர வேண்டியது இந்தியாவின் கடமை. அதுதான், நமது நாட்டில் பிறந்த அறிவார்ந்த சான்றோர்கள் மற்றும் சமூக சீர்திருத்த வாதிகளின் கனவை நிறைவேற்றுவதும் ஆகும்.


(சுதீந்திர குல்கர்னி, கட்டுரை ஆசிரியர், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றியவர். மும்பையில் இயங்கி வரும் "அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். விமர்சனங்களை sudheenkulkarni@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு ஆங்கிலத்தில் அனுப்பலாம்)


இந்திய வெளியுறவு அமைச்சகம் உருவான வரலாறு


* பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த போது, 1783, செப்டம்பர் 13ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி இயக்குனர் குழு, கோல்கட்டாவில் கூடியது. அதில், ஐரோப்பிய நாடுகள் உடனான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை நிர்வகிப்பதற்காகத் தனித் துறை ஒன்றை அமைக்கும் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


* 1843ல் அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல், எட்வர்ட் லா, முதன் முதலாக, இந்திய அரசில், வெளியுறவு, உள்துறை, நிதி மற்றும் ராணுவ அமைச்சகங்களை உருவாக்கினார்.


* 1935ல் கவர்னர் ஜெனரலின் நேரடிப் பொறுப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தனியாகச் செயல்படத் துவங்கியது.


* 1946ல் இந்திய வெளியுறவுச் சேவை (ஐ.எப்.எஸ்.,) துவக்கப்பட்டது.


* 1948ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய சிவில் சேவைத் தேர்வுகளின் மூலம் முதல் முதலாக வெளியுறவுச் சேவைக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று வரை இந்தத் தேர்வு மூலம்தான் வெளியுறவு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.


* மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் 162 வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இரண்டையும் சேர்த்து, தற்போது மொத்தம் 600 ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர்.


அணிசேராக் கொள்கை


* இந்தியா விடுதலை பெற்றவுடன், முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவே வெளியுறவு பொறுப்பையும் கவனித்துக் கொண்டார்.


* இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய வல்லரசுகளின் பக்கம் சார்ந்து இரண்டாகப் பிரிந்து கிடந்தன. இவற்றுக்கிடையே காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான புதிய நாடுகள் இருந்தன.


* அனைத்துக்கும் ஒரு வழிகாட்டியாக, எந்த நாட்டின் பக்கமும் சேராமல், புதிய உலக நாடுகள் அனைத்தும் தனி ஒரு அணியாக இருப்பதற்கு வகையளித்த "அணிசேராக் கொள்கையை' நேரு உருவாக்கினார்.


பஞ்சசீல கொள்கை: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் 1954ல் பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது.


* இருநாடுகளும் பரஸ்பரம் எல்லை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும்.


* ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வலிந்து தாக்குதலில் ஈடுபடக் கூடாது.


* இன்னொரு உள்நாட்டின் விவகாரங்களில் தலையிடக் கூடாது.


* இருநாடுகளும் சமமாகவும் பரஸ்பரம் நன்மை தரும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும்.


* அமைதியான இணக்க உறவு.இந்த பஞ்சசீலக் கொள்கையை உலக நாடுகள் தங்கள் வெளியுறவில் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் இவற்றை சீனா மீறியது தனிக் கதை.


இந்தியாவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள்: உலகில் குறிப்பிடத்தக்க வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியா, பல நாடுகளுடன் ராணுவ உறவு கொண்டிருக்கிறது. எனினும், குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டின் ராணுவத்துடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.


* இந்தியாவுக்கு அதிகளவில் ராணுவத் தளவாடங்களை வினியோகம் செய்வதில் ரஷ்யா முதலிடத்தில் இருக்கிறது. அதையடுத்து, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.


* இவை தவிர, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், தென்னாப்ரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளுடனும் ராணுவ உறவை மேற்கொண்டுள்ளது.


* தஜிகிஸ்தானில் இந்தியாவுக்கு ஒரு விமானப் படைத் தளம் உள்ளது. 2008ல் கத்தார் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

வ.உ.சி. கண்ட பாரதி




வ.உ.சி. கண்ட பாரதி

First Published : 11 Dec 2010 12:00:00 AM IST


பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயரும் வ.உ.சி.யின் தகப்பனார் உலகநாதன் பிள்ளையும் நல்ல நண்பர்கள். சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் சமஸ்தானத்து உயர்மட்ட ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே சமஸ்தானத்தின் வக்கீலாகத் திகழ்ந்தவர் உலகநாதன் பிள்ளை. வ.உ.சி.யின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் அப்போது தாலூகா நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருந்தன. சமஸ்தான அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வருகிறபோதெல்லாம் தனது அலுவலக சகாவும் நண்பருமான வக்கீல் உலகநாதன் பிள்ளையின் வீட்டில்தான் தங்குவார் சின்னச்சாமி ஐயர். அவ்வாறு தங்கிய நேரங்களில் நண்பர்கள் இருவரும் மற்றும் சிலரும் ஓய்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலி என்றும், தமிழில் சுயமாகப்பாடும் திறன் பெற்றவன் என்றும் உலகநாதன்பிள்ளை தனது மகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சி.சுப்பிரமணிய பாரதி குறித்துப் பெருமையாகச் சொல்வதுண்டு. அப்போது வ.உ.சி. பதினைந்து வயதுப் பாலகனாக இருந்தார். பின்னர் வளர்ந்து வழக்கறிஞரான பிறகு தனது பணியின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியிலிருந்து நகரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியாரின் வீடு அங்கிருப்பதை அறிந்தார். அடிக்கடி அவ்வீட்டைத் தாண்டிச் சென்ற வ.உ.சி., ஒருநாள் அவ்வீட்டுக்குள் திருமலாச்சாரியாரைச் சந்திக்கும் நோக்கில் சென்றார். அதிபர், வீட்டின் மாடிப்பகுதியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மாடிக்குச் சென்று திருமலாச்சாரியாரைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வ.உ.சி. வ.உ.சி. தனது ஊரையும் பெயரையும் உச்சரித்து முடித்தவுடனேயே திருமலாச்சாரியார் மாடியின் உள்ளே அமைந்த அரங்கை நோக்கி ""பாரதி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார்'' என்று உரக்கச் சொல்ல, உள்ளே இருந்த பாரதி, அதிபர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். இவர்தான் ஆசிரியர் சுப்பிரமணியபாரதி என்று வ.உ.சி.க்கு பாரதியை அறிமுகப்படுத்தினார் திருமலாச்சாரியார். முதல் சந்திப்பே இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்தது. இருவருமே ஒருவரையொருவர் நேரில் அதுவரை பார்த்ததில்லையாயினும் இருவரின் பள்ளிப்பருவ காலத்திலேயே இரண்டு பேரின் தந்தைமார்களும் தங்களின் மகன்களைப் பற்றி அக்காலத்திலேயே கருத்துகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருந்த காரணத்தால், ஒருவரைப்பற்றியொருவர் நன்கு அறிந்திருந்தனர். பழைய நினைவுகளைப் பாசத்தோடும் பரவசத்தோடும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்ததோடு பாரதி, திருமலாச்சாரியார், வ.உ.சி. மற்றும் இந்தியா இதழில் பணியாற்றும் இன்னொரு நண்பர் என நால்வரும் பேசியவாறே திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரை மணலில் அமர்ந்தபடி அன்றைய நாட்டு நடப்பு குறித்து விரிவாக வெகுநேரம் மிகுந்த அக்கறையோடு கலந்து பேசினர். பெரும் பகுதி நேரம் பாரதியும் வ.உ.சி.யுமே உரையாடினர். தனது முதல் சந்திப்பு குறித்து வ.உ.சி., ""அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது'' என்றும், ""என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது'' என்றும் பதிவு செய்துள்ளார். சென்னை செல்கிறபோதெல்லாம் அன்றாடம் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று பாரதியுடன் மெய்மறந்து உரையாடியதையும், அவர்கள் இருவரும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று நீண்ட நெடுநேரம் அன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் குறித்துப் பேசுவதுமாக இருந்ததாகவும் வ.உ.சி. தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பாரதியின் அரசியல் பிரவேசத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகத் தொடங்கிவிட்டன. 1893-ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதரதிலகரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக வ.உ.சி.யே குறிப்பிட்டுள்ளார். 1898-ல் வ.உ.சி. காங்கிரஸ் மகாசபையில் அங்கம் பெற்று அமைப்புரீதியாகவே செயல்பட்டு வந்துள்ளார். வ.உ.சி.யின் அரசியல் தெளிவை, தேசிய இலக்கிய மாத இதழான விவேகபாநு இதழில் 1906-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சுதேசாபிமானம் எனும் அவரது முதல் அரசியல் கட்டுரையின் மூலம் நன்கு உணரலாம். 1906-ன் தொடக்கத்தில் பாரதியை தான் முதன்முதலாகச் சந்தித்ததாக தனது வாழ்க்கைக் குறிப்பில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். பாரதியை முதலில் சந்தித்தபோதே அரசியல் தெளிவோடும் கொள்கை உறுதியோடும் விளக்கியுள்ளார். வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. முதல் சந்திப்பில் தன் உள்ளத்தில் தேசாபிமான நெருப்பு விளக்குபோல் ஒளிவிட்டுப் பிரகாசித்த செய்தியை வ.உ.சி. பாரதியிடம் சொல்லி முடித்தவுடன் மாலை 4 மணியிலிருந்து மெய்மறந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், ""சக்திதுணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி'' என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி. அடிக்கடி இவ்வாறான இருவரின் சந்திப்பு நிகழ்ந்ததோடு பாரதி வீட்டுக்கு வ.உ.சி. செல்வதும் வ.உ.சி. தங்கியிருந்த இல்லத்துக்கு பாரதி வருவதும், இருவருமாகச் சேர்ந்து உண்பதும் உறங்குவதுமாகத் தோழமை வேரூன்றியது. அந்தச்சூழலில் பிரான்ஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் இன்னும் இதுபோன்ற கிளர்ச்சிகள் பற்றி வெளிவந்திருந்த ஆங்கிலக்கவிதைகள் குறித்தும் பாரதி, வ.உ.சி.க்கு உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார். இவர்களின் உறவின் நெருக்கம் மாமனார், மருமகன் என்று முறை வைத்துத் தங்களுக்குள் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தது. திருவல்லிக்கேணியிலிருந்த தேசபக்தர்களான மண்டயம் குடும்பத்தாரிடம்- குறிப்பாக திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பின்னர் பாரதியும் வ.உ.சி.யும் முன்னின்று சென்னை ஜனசங்கம் என்ற தேசாபிமான சங்கத்தை அமைத்தனர். தீவிரவாத தேசியத்தையும் மிதவாத தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்த சூழலில், திலகர் தலைமையில் திரண்ட தீவிரவாத தேசியப் பிரிவின் முன்னணிப் படைத்தளபதிகளாக வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர் விளங்கினர். சூரத்தில் 1907-ம் ஆண்டு நடைபெற்ற இருபத்து மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டதோடு அம்மாநாட்டின் நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர்கள் பாரதியும், வ.உ.சி.யும். வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி வெள்ளையனுக்கு எதிராக இரண்டு சுதேசிக் கப்பல்களை ஓடவிட்டது, அங்குள்ள கோரல் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது, விபின்சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாடியது போன்ற புரட்சிகர வடிவங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றபோது பாரதி இந்தியா இதழில் இந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிதவறாமல் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இதழ்மூலம் தமிழகத்தில் ஒரு புத்தெழுச்சியையே உருவாக்கினார் பாரதி. வ.உ.சி., சிவா ஆகியோரை ஆங்கிலேய அரசு அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அளித்தபோது வெகுண்டெழுந்தார் பாரதி. ""தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயிலில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம்போல் எண்ணெய் ஆட்டும் செக்கிழுக்கும்படி செய்கிறாராம். நடு வெயிலில் தீப்பறக்கும் செக்கிழுத்துக் கஷ்டமடைகிறாராம். அந்தோ இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போதே நெஞ்சுருகுகிறதே... இங்கெழுதும் போதே கை நடுங்குகிறதே... இக்கொடுந்துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்ஙனமோ கடவுளேயறிவர்''. ""கைதிகளுக்கு எத்தனை வேலைகள் இருக்க இத்தேசபக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் யந்திரம் சுழற்றும் வேலையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்களுக்கு விலங்கிடுவதேனோ?'' எ ன்று 1908-ம் ஆண்டு இந்தியா இதழில் மனம் பதைபதைக்க நெகிழ்ந்துபோய் எழுதியுள்ளார் பாரதி. வெறும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வின்ச், வ.உ.சி.யிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுமொழி சொன்னதாகவும் பாரதி வடித்த இரண்டு கவிதைகள் ஒரு காவியம்போல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்து விட்டவை. தொடக்கத்தில் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யும் சிவாவும் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாளையங்கோட்டை சென்று சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருவரையும் சிறைச்சாலைக்குள் பார்த்து உரையாடிவிட்டு வந்தார் பாரதியார்.இந்நிகழ்வு குறித்து எழுதும்போது ஸ்ரீசிதம்பரம் பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸýடனும் விளங்கியதோ அதே மாதிரியிலேயே இப்பொழுதும் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவி மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டது. வரலாறு காணாத பேரெழுச்சி திருநெல்வேலியில் மூண்டு விட்டது. இந்த மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறை களமிறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டது. குண்டடி பட்டுச்சாவு, படுகாயம் என்று மக்கள் பதறிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் விளைவுகளை நேரில் கண்டறிந்து இந்தியாவில் எழுதுவதற்காக பாரதி திருநெல்வேலிக்கே சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து விசாரித்தறிந்து தனது இதழில் விளக்கமாக எழுதினார். பாரதி புதுச்சேரியில் இருந்த காலங்களில் அவரைச் சந்திப்பதற்கென்றே புதுச்சேரிக்குச் சென்று அவருடன் தங்கியிருந்து தன்னுடைய தோழமையை வெளிப்படுத்தியவர் வ.உ.சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் திரிசூலம் என்றும் மும்மூர்த்திகள் என்றும் போற்றப்பட்டவர்கள் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர். இதில் வ.உ.சி., சிவா உறவு குறித்தும், பாரதி-சிவா நட்பு குறித்தும் தனித்தனியாக விரித்துச் சொல்லும் அளவுக்கு ஆழமானவை. 1936-ல் வ.உ.சி. மரணப்படுக்கையிலிருக்கும் வேளையில் காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை அழைத்து பாரதி பாடலைப் பாடப் பணித்தார். "என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்' என்ற பாடலை உருக்கம் கலந்த எழுச்சியோடு சிவகுருநாதன் பாட அதைக் கேட்டுக் கொண்டே வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.

புவி வெப்பமடைதல் காங்கிரஸ் நிலைபாட்டிற்கு தினமணி பாராட்டு



புவிவெப்பமாதல் தடுப்பு நடவடிக்கையில், முதல்முறையாக இந்தியா தனது உறுதியான முடிவை அறிவித்துள்ளது. மெக்ஸிகோ, கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. புவிவெப்ப தடுப்பு நடவடிக்கை மாநாட்டில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டப்படியான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றோ, புவிவெப்பம் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. இருப்பினும் இத்தகைய முடிவுக்கு, இந்தியாவில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருப்பதே காரணம்.

இவ்வளவு வெளிப்படையாக உலக அரங்கில் பேச வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் சீனா. அண்டை நாடான சீனா, வளிமண்டல மாசுக்கான வாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் யாரும் தன்னை நிர்பந்திக்க முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு இணையான தொழில்போட்டியில் உள்ள சீனா இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்ட பிறகு, அதேபோன்ற நிலைப்பாட்டை ஏற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியில் பெருந்தடைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே, சீனாவுக்கு இணையான காய் நகர்த்தல் என்றே இந்த முடிவை நாம் ஏற்கவேண்டியுள்ளது.

புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க வேண்டுமானால், புவிவெப்பம் அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸýக்கு மேலாக உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும் என்றும் கியோட்டோ தீர்மானத்திலும், அதன்பின்னர் கோபன்ஹேகனில் நடைபெற்ற மாநாட்டிலும் பேசப்பட்டன.

இந்த இலக்கை அடைவதற்கு மிக அடிப்படையான தேவை தொழில் மாசுக் கட்டுப்பாடுதான். தொழிற்சாலைகள் கரியமில வாயு உள்ளிட்ட வளிமாசு வாயுக்களை வெளியேற்றும் பழைய தொழில்நுட்ப நடைமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். இத்தகைய நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதென்பது அமெரிக்காவுக்குச் சாத்தியமானது என்றாலும், வளரும் நாடுகளுக்கு மிகப் பெரும் பொருள்செலவைத் தரக்கூடியது. இத்தகைய மாறுதல்களைப் புகுத்தும்போது சில தொழில்களில் ஆள்கள் குறைக்கப்பட நேரும். வேலையிழப்பு ஏற்படும். சில தொழில்கூடங்களை முற்றிலுமாக இழுத்து மூடவேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இத்தகைய முடிவுகளைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். தடாலடியாகப் புகுத்தினால் குழப்பமும், தொழிலாளர் வாழ்க்கைச்சீரழிவும்தான் எதிர்வினையாக முடியும்.

இத்தனை ஆண்டுகளாக வளிமண்டல மாசுக்கு அடிப்படைக் காரணமாகிய அமெரிக்கா இன்று நல்லபிள்ளை நானே என்று கூறிக்கொண்டாலும், தன் நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட முன்வருவதில்லை. வளரும் நாடுகளால்தான் அதிக மாசு என்று கூறி, அவர்களுக்குப் புத்தி சொல்கிறது. நிதி தருகிறேன் தொழில்நுட்பத்தை மாற்றுங்கள் என்று சொல்கிறது. இந்தியாவுக்கு இவர்கள் தருவதாகச் சொல்லும் நிதியுதவி வெறும் வழிச்செலவு மட்டுமே.

குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, இந்த நிதியைப் பெறும் நாடுகளில் வளிமண்டல வாயு வெளியேற்றம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சட்டப்படியாக கண்காணிப்போம் என்கிற நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இது ஒரு மறைமுகமான நெருக்கடி ஆகும். சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு இணையாக தொழில் போட்டியை நடத்த முடியாமல் பின்தங்கிப் போகும் சூழலுக்கு இட்டுச்செல்லும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்கூடங்களையும் நவீனப்படுத்த போதுமான நிதி நம்மிடம் இல்லை. மேலும், இதற்காக தொழில் மேம்பாட்டுநிதி ஏற்படுத்தினாலும், அதைத் தின்பவர்கள் வழக்கமான போலிகளும், ஊழல் பேர்வழிகளாகவுமே இருப்பார்கள். இன்றைய சூழல் அப்படியாக இருக்கிறது. இந்தியாவில் இயல்பான தொழில்நுட்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில்துறைக்கு சக்தி தந்து, அவர்கள் மாறும்படிச் செய்யும்நடைமுறைக்குச் சில ஆண்டுகள் அவகாசம் தேவை. புவி வெப்பமாதல் மிகமுக்கியமான பிரச்னை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்கள் தொழில்வாய்ப்பை இழக்காமல் இருப்பதும் முக்கியம்.

உலகச்சுற்றுச்சூழல்மீது இந்தியாவுக்கும் கவலையும் கரிசனமும் இருக்கவே செய்கிறது. ஆனால், இதனை எங்கள்மீது மட்டும் திணிக்காதீர்கள் என்பதுதான் இந்த வெளிப்படையான அறிவிப்பின் பொருள்.

Tuesday, December 7, 2010

அரசியல்வாதிகளின் ஆடம்பர திருமணங்கள் தினமணி தலையங்கம்

தலையங்கம்: நவீன "நீரோ'க்கள்!

First Published : 07 Dec 2010 03:01:14 AM IST

கட்சிகள் எதுவாக இருந்தாலும், நமது அரசியல் தலைவர்களின் மனப்போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருமே ஒன்றுபோல சராசரி இந்தியனின், சாமானிய மக்களின் நிலை அறியாதவர்களாக, தங்களது பதவியின் பகட்டை வெளிக்காட்டுவதில் மோகமுடையவர்களாக இருக்கிறார்களே தவிர, பொதுவாழ்க்கையில் தான் ஒரு முன்னுதாரணமாக இருந்து காட்டவேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையைத் தருகிறது.கட்சி மாநாடுகளை இவர்கள் பலகோடி ரூபாய்கள் செலவழித்து பிரம்மாண்டமாக நடத்திக்காட்டுவது, தங்களது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்த என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால், தங்களது வாரிசுகளின் திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டி, தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம்போட நமது அரசியல் தலைவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் புதிராக இருக்கிறது.சமீபத்தில், முகம் சுளிக்கவைத்த படாடோப அரசியல் திருமணம் நாகபுரியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்கரியின் மகனுடையது. விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம் திருமண வரவேற்புக்காக அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தால், ஏதோ கோடீஸ்வரர் வீட்டுத் திருமணம் போலிருக்கிறது என்கிற பிரமிப்பை ஏற்படுத்தியது. வண்ண விளக்குகளால் அந்தப் பகுதி முழுவதும் சினிமாவில் வரும் கனவுக் காட்சிபோல ஜோடிக்கப்பட்டிருந்ததே, இதெல்லாம் எங்கே தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி என்று அறியப்படும் விதர்பாவில். அந்த மாநிலத்திலேயே மிக மோசமான மின்வெட்டு நிலவுவது இந்தப் பகுதியில்தான். அங்கேதான் இத்தனை ஆர்ப்பாட்டமாக இப்படியொரு திருமண வரவேற்பு நடந்து முடிந்திருக்கிறது.ஒரு மாதம் முன்பு, மதுரையில் நடந்த மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சரும் தமிழக முதல்வரின் மூத்த மகனுமான மு.க.அழகிரி வீட்டுத் திருமணம் எந்த விதத்தில் குறைந்தது? மதுரையில் முதல்வர் குடும்பத்துத் திருமணத்தைப் பலரும் 1995-ல் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்துடன் ஒப்பிட்டுப் பெருமூச்சு விட்டதில் தவறில்லை. அந்தத் திருமணத்தில் ஜெயலலிதாவும் தோழி சசிகலாவும் சர்வாலங்காரபூஷிதைகளாக வைரத்தால் அலங்கரித்துக்கொண்டு வலம்வந்தனர். முதல்வர் குடும்பத்துத் திருமணத்தில், குடும்பம் ரொம்பப் பெரிது என்பதால், பலர் வைரமும், வைடூரியமும் பளபளக்க வலம் வந்தனர். அதுவும் முகம் சுளிக்க வைத்தது. இதுவும் முகம் சுளிக்க வைத்தது.சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் பிரபுல் படேல் வீட்டுத் திருமணமும் இதேபோலத்தான், திரைப்படத் திருமணங்களும் கோடீஸ்வரர், தொழிலதிபர்கள் வீட்டுத் திருமணமும் தோற்றுவிடும்படியாக, பிரம்மாண்டமாக நடந்தேறியது. அதற்காக சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுத் திருமணம்போல எல்லாப் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக சிறப்பு மலர்களை வெளியிட்டு அந்தப் படாடோபத்தை வாழ்த்தி வரவேற்று, அதில் தாங்களும் வருமானம் ஈட்டின.கடந்த 20 ஆண்டுகளில் நடந்த அரசியல் திருமணங்களையும், அதற்கு முன்னால் நடந்த அரசியல் திருமணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடு தெரிகிறதே. பண்டித நேருவின் குடும்பத்தையே எடுத்துக் கொள்வோம். பணத்துக்குப் பஞ்சமா, பதவி அதிகாரத்துக்குப் பஞ்சமா, தொண்டர் கூட்டத்துக்குப் பஞ்சமா? மார்ச் 26, 1942-ல் அலாகாபாத் ஆனந்தபவனில் நடந்த பெரோஸ்காந்தி - இந்திராவின் திருமணம் ஆனாலும், பிப்ரவரி 25, 1968-ல் புதுதில்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டில் நடந்த ராஜீவ்காந்தி-சோனியா திருமணம் ஆனாலும் எளிமையாக மிகவும் நெருங்கிய நண்பர்களை அழைத்துத்தான் நடத்தப்பட்டன. 1974-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று சஞ்சய்காந்தி-மேனகாவை மணந்தது மட்டுமென்ன? பண்டித ஜவாஹர்லால் நேரு சிறையில் இருக்கும்போது ராட்டையில் நூற்ற நூலிலிருந்து நெய்யப்பட்ட கதர் சேலையைத்தான் மேனகாவுக்கு அணிவித்து மணப்பெண்ணாகச் சிங்காரித்தார் அன்றைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி.சர்வ வல்லமை படைத்த பிரதமராக இந்திராகாந்தி இருந்த நேரம் அது. அவர் ஒரு திருமண வரவேற்பு நடத்தியிருந்தால், உலகத் தலைவர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், எளிமையாகத் திருமணம் நடத்தியது மட்டுமல்ல, இப்படிச் செய்வதன் மூலம் திருமணங்களில் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற செய்தியையும் தேசத்துக்கு மறைமுகமாக விடுத்தார் இந்திரா காந்தி அம்மையார்.அதெல்லாம் ஏன்? தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா நினைத்திருந்தால், தனது வளர்ப்பு மகனுக்குத் தான் முதல்வராக இருக்கும்போது திருமணம் செய்து பார்த்திருக்க முடியாதா? தமக்கு உடல்நலம் சரியில்லை என்றபோதும் கூட, பதவியைப் பயன்படுத்தி பிரம்மாண்டமாகத் திருமணம் நடத்துவதை அவர் விரும்பவில்லையே...ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் எத்தனை கோடிப்பேர் நமது இந்தியாவில்? பெண்களைப் பெற்றுவிட்டு அவர்களைக் கரையேற்ற வழியில்லாமல் தவிக்கும் பெற்றோர் எத்தனை எத்தனை பேர்? திருமணங்களை ஆடம்பரமாக நடத்தி, வீண் விரயம் செய்யக்கூடாது என்று வழிகாட்ட வேண்டியவர்கள், எளிமையாக வாழ்ந்துகாட்ட வேண்டியவர்கள் தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் பதவியையும் பகட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் போட்டி போடுகிறார்களே இந்த முட்டாள் தனத்தை நாம் என்னவென்று சொல்வது?இன்றைய இந்தியாவில், இவர்களெல்லாம்தான் சாமானியர்கள். இவர்களெல்லாம்தான் மக்கள் பிரதிநிதிகள்... இவர்களெல்லாம்தான் பொது வாழ்க்கைக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்...காந்தி மகான் பிறந்த தேசமா இது? ஹே....ராம்...!

Saturday, December 4, 2010

வெள்ளம் பாதித்த பகுதிகளை அய்யா ஜி.கே.வாசன் பார்வையிட்டார்.


வெள்ளம் பாதித்த பகுதிகளை மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்கள் பார்வையிட்டார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் தஞ்சை,திருவாரூர், நாகபட்டினம், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெல்ல பாதிப்பு ஏற்பட்டு நெற்பயிர், மற்றும் வாழை சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் இன் நிலையில் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளை கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் அய்யா அவர்கள் நேரில் ஆய்வு செய்தார் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் பணிகளையும் பார்வையிட்டார் மேலும் விவசாயிகளுக்கு அரசிடம் உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்வதாக வாக்களித்தார்.
மக்கள் தளபதி அவர்கள் மக்கள் பணி சிறக்கட்டும்.
வாழ்க மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன்

அய்யா ஜி.கே.வாசன் அவர்களின் எளிமை


போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஜி.கே.வாசன்: விமானத்தைப் பிடிக்க பைக்கில் பறந்தார்!

வெள்ளி 5, பிப்ரவரி 2010 5:18:39 PM (IST)

திருச்சி வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து விமானத்தைப் பிடிப்பதற்காக கட்சிக்காரருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி விமான நிலையம் விரைந்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மகள் திருமணம் திருச்சி கலைஞர் அறிவலாயத்தில் இன்று காலை நடந்தது. ஜி.கே.வாசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பிறகு கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்ற வாசன் அங்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

திருவானைக்காவல் காவேரி பாலம், கல்லணை சாலை வழியாக திருச்சி- சென்னை பைபாஸ் ரோட்டில் பால்பண்ணை ரவுண்டானா அருகில் கார் வந்த போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தன.

இந்த போக்குவரத்து நெருக்கடியில் வாசன் காரும் சிக்கிக்கொண்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்த பிறகு காரில் சென்றால் விமானத்தை பிடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து காரிலிருந்து இறங்கிய வாசன், திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜராஜசோழனின் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிள், விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.

வாசன் திடீரென மோட்டார் சைக்கிளில் செல்வதைப் பார்த்ததால் மக்களும் சரி, கட்சியினரும் சரி பரபரப்படைந்தனர். வாசன் பைக்கை கட்சிக்காரர்களும் பிந் தொடர்ந்து பைக்குகளில் பறந்தனர். போலீஸாரும் உடன் விரைந்தனர். இதனால் அந்த சாலையே பரபரப்பாகி விட்டது. டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக சென்று ஜி.கே.வாசனை குறித்த நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு தான் காங்கிரஸ் நிர்வாகிகள் நிம்மதி பெமூச்சு விட்டனர்.

முக்கியமான அரசியல் தலைவர்கள் இதுபோல சாதாரணமான சவாரிகளை மேற்கொள்வதெல்லாம் தமிழகத்தில் அத்தி பூத்தாற் போல நடக்கும் நிகழ்வு என்பதால் மக்களும் வாசன் பைக்கில் செல்வதை வேடிக்கை பார்த்தனர்