Thursday, November 11, 2010

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்லில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் ஒபாமா உறுதி


இந்தியா வருகை தந்த வெள்ளை வானின் கருப்பு நிலா ஒபாமா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்திய விற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்லில் நிரந்தர உறுப்பினர் ஆகும் என்று உறுதி அளித்தார் மேலும் அவர் ஆற்றிய உரை பின் வருமாறு
""ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மாற்றி அமைக்கப்படும் போது, அதில், இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம் பெறும்,'' என, பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் எம்.பி.,க்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிபட தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நேற்று பார்லிமென்ட் கூட்டு கூட்டத்தில் எம்.பி.,க்கள் மத்தியில் 35 நிமிடம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: நூறு கோடிக்கும் மேலான மக்களைக் கொண்ட, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பார்லிமென்டில் உரை நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது, எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம். 30 லட்சம் அமெரிக்க இந்தியர்கள் உட்பட ஏராளமான மக்களைக் கொண்டுள்ள உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவிலிருந்து நான் வாழ்த்துக்களையும், நட்புறவையும் கொண்டு வந்துள்ளேன். கடந்த மூன்று நாட்களில் என்னையும், என் மனைவி மிச்சேலையும், ஒவ்வொரு இடத்திலும் மிகச்சிறப்பாக வரவேற்றனர். இந்தியர்களின் சிறப்பான விருந்தோம்பலைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

இந்தியா வளர்ந்து வரும் நாடல்ல; அது ஏற்கனவே வளர்ந்து விட்ட நாடு.எனது அதிபர் பதவிக் காலத்தில், இந்தியாவுக்கு இவ்வளவு விரைவில் வர வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமை அடைகிறேன். எனது தற்போதைய நான்கு நாடுகள் பயணத்தில், இந்தியாவுக்குத் தான் முதலில் வந்துள்ளேன். வரக்கூடிய ஆண்டுகளில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மாற்றி அமைக்கப்படும் என, எதிர்பார்க்கிறேன். அப்படி மாற்றப்படும் போது, இந்தியா அதில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறும். பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவும் தயாராகி வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மனித உரிமைகள், பொருளாதார தடைகள் போன்ற பிரச்னைகள் உட்பட பல பிரச்னைகளில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திறமையான வகையில் செயல்படுவதை உறுதி செய்ய, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். உலகம் முழுவதும் ஐ.நா., அமைப்பு மேற்கொண்டுள்ள அமைதிப் பணி நடவடிக்கையில், இந்தியா பங்கு கொண்டுள்ளதைப் பாராட்டுகிறேன்.

ஏற்க முடியாது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகள் தொடர்வதை, அமெரிக்கா வரவேற்கும். அந்த இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகள் மூலமாகவே தங்களின் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். மும்பை தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்கள், நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாக பாகிஸ்தான் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மும்பை தாக்குதல் சதிக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என, பாக்., தலைவர்களை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகிக் கொண்டிருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. இந்தியாவுக்கு எப்போதும் தோளோடு தோள் நின்று அமெரிக்கா உதவி செய்யும். இன்றைய நாளில் உள்ள நாகரிக சமுதாயம் உருவாக, இந்திய தலைவர்கள் பலர் சிறப்பான பங்காற்றியுள்ளனர். மகாத்மா காந்தி மற்றும் அவரின் செய்திகள், அமெரிக்கர்களுக்கு பெரிய அளவில் ஊக்கமளித்தன. அப்படி இல்லையெனில், அமெரிக்க அதிபராக இன்று நான் உங்களின் முன் நின்றிருக்க முடியாது. காந்தியின் வாழ்க்கை மூலம் பெற்ற தூண்டுதலே என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அரசியல் சட்டம் ஜாதி, இன, மத பேதம் இல்லாமல் அனைவருக்கும் சம உரிமை அளிக்கிறது. இந்த அரசியல் சட்டத்தை உருவாக்க அம்பேத்கர் ஆற்றிய பணி மகத்தானது. காலநிலை மாற்றம், மாசற்ற எரிசக்தி, விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். உலகில் பகிரங்க சந்தையை கொண்ட நாடாக அமெரிக்கா உள்ளது; அது இனியும் தொடரும். அதேநேரத்தில், வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தற்காப்பு நடவடிக்கைகளை இரு நாடுகளும் சேர்ந்து தகர்த்தெறிய வேண்டும். பகிரங்க சந்தை பொருளாதாரத்தை அமல்படுத்தியதால், வெளிநாட்டு முதலீடுகளுக்கான தடையை நீக்கியதால், தற்போது இந்தியா பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது.

அணுசக்தியை ஒவ்வொரு நாடும் ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. அதே நேரத்தில், இதைச் செய்ய சர்வதேச ரீதியிலான கடமைகளையும் அந்நாடுகள் பூர்த்தி செய்ய வேண்டும். இது, ஈரான் நாட்டிற்கும் பொருந்தும். உயர் தொழில்நுட்பத்தை மற்றும் உயரிய சம்பளம் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடியும். அதற்கு விவசாயம், ஆராய்ச்சி, வானிலை முன்னறிவிப்பு, உணவு பதப்படுத்துதல் உட்பட பல துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.அமைதியையும், பாதுகாப்பையும் பேணிக் காப்பதும், ஜனநாயக ரீதியான அரசு நிர்வாகத்தை பலப்படுத்துவதுமே ஒரு தலைவரின் கடமை. இதைச் செயல்படுத்துவதில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.

லோக்சபா சபாநாயர் மீரா குமார் நன்றி தெரிவித்தார். ராஜ்யசபா தலைவர் அன்சாரி வரவேற்றார். தன் பேச்சை முடிக்கும் போது ஒபாமா, "மிக்க நன்றி' என்று இந்தியில் கூறி அனைவரையும் கவர்ந்தார்.

No comments:

Post a Comment