Wednesday, November 17, 2010

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது தயா மாஸ்டர் புகார்: இந்திய ஒப்பந்தத்தை ஏற்காததால் நிலைமை மோசமாகி விட்டது

                                  
விடுதலைப்புலிகள் பத்திரிகை தொடர்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர். இறுதிப்பேரின் போது தயா மாஸ்டர் ராணுவத்திடம் சரண் அடைந்தார். தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அரசு ஆதரவு டி.வி. நிருபராக செயல்படுகிறார்.
 
இலங்கை போர் தொடர்பாக விசாரித்து வரும் கமிஷனிடம் அவர் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
 
1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த பேரழிவுகள் ஏற்பட்டு இருக்காது. அதன் பிறகும் 1990, 1995, 2000-ம் ஆண்டுகளில் இலங்கை அதிபர்கள் சமரச தீர்வுகளுக்கு முன்வந்தனர். அதையும் பிரபாகரன் நிராகரித்துவிட்டார். இதனால்தான் ஏராளமான மக்கள் பலியாகும் நிலை உருவாகிவிட்டது.
 
2002-ம் ஆண்டு போர் ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறினார்கள். 4-வது ஈழப்போர் தொடங்கிய நேரத்தில் விடுதலைப்புலிகள் மூத்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.

அதில் அமைதியான தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் பேரிழிவுகள் தவிர்க்கலாம் என்றும் கூறி இருந்தனர். ஆனால் பிரபாகரன் இதை கண்டு கொள்ளவே இல்லை.
 
இறுதி போர் காலத்தில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க போர் இல்லாத பகுதியாக சில இடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் இதை விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் யாருமே மதிக்கவில்லை. இதனால்தான் ஏராளமான பொதுமக்கள் பலியானார்கள்.
 
இப்போது போர் முடிந்துள்ள நிலையில் ஈழ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும். கைதான விடுதலைப்புலிகள் விடுதலை செய்ய வழி காணப்பட வேண்டும். காணாமல் போனவர்களும் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இவ்வாறு தயா மாஸ்டர் கூறினார்.

No comments:

Post a Comment