Friday, November 12, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் பதவி விலக ராசா மறுப்பு



2ஜி ஸ்பெக்ட்ராம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று மத்திய தொலைத் தொடர்புத் துறை மந்திரி ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த 2 நாட்களாக அமளியில் ஈடுபட்டன. இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆ.ராசாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று கூறினார். இதற்காக மத்தியில் ஆளும் காங்கிரசை ஆதரிக்க தயார் என்றும் தெரிவித்தார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ஆ.ராசாவை பதவி விலக சொல்லப் போவது இல்லை என்று மத்திய அரசு நேற்றே சூசகமாக தகவல் வெளியிட்டது. இன்று (வெள்ளி) காலை டெல்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய மந்திரி ஆ.ராசாவும் இதை உறுதிப்படுத்தினார். ராசா நிருபர்களிடம் கூறியதாவது:-
2ஜி ஸ்பெக்ட்ராம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட போது 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை வழிகாட்டுதல்களை கடை பிடித்தோம். சட்டத்தின்படி தான் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்தது. சட்டத்துக்கு உட்பட்டே இதில் நான் பணியாற்றி உள்ளேன்.
இதை நாங்கள் கோர்ட்டில் தெரிவிப்போம், நிரூப்பிபோம். இப்டிப்பட்ட சூழ்நிலையில் நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை.
2ஜி ஸ்பெக்ட்ராம் அலைகற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணை தற்போது கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் நான் மேற்கொண்டு எதுவும் பேசுவது நல்லதல்ல.
சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் நாங்கள் எல்லா தகவல்களையும் தெரிவித்துள்ளோம்.
1999-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய தொலைத் தொடர்புத்துறை கொள்கையை, மத்திய கணக்குத் தணிக்கைத் துறை விமர்சித்தது. என்றாலும் புதிய தொலைத் தொடர்பு கொள்கையில் எந்த வித மாற்றமும் செய்யப்பட வில்லை. அதே தொலைத் தொடர்பு கொள்கையைத் தான் எனக்கு முன்பு இருந்தவர்களும் கடைபிடித்தனர். தற்போது நானும் கடை பிடித்து வருகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார். இப்படி சொல்வதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. ஏனெனில் அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே இப்படி கூறி வருகிறார்.
இந்தியாவிலேயே தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணைகளை 10,12 ஆண்டுகளாக இழுத் தடித்து வரும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான். எனவே என்னை பதவியில் இருந்து நீக்க சொல்லும் அதிகாரம் அவருக்கு இல்லை.
2ஜி ஸ்பெக்ட்ராம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் என்ன சொல்லியுள்ளது என்று எனக்கு தெரியாது. அந்த அறிக்கை இன்னும் என் கைக்கு வரவில்லை. அந்த அறிக்கையை பார்த்த பிறகு கருத்துக்களை சொல்ல முடியும்.
இவ்வாறு மத்திய மந்திரி ஆ.ராசா கூறினார்.
பாராளுமன்றத்தில் ஆ.ராசாவை குறி வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால், இதற்கு பதிலடி கொடுக்க பிரதமர் மன்மோன்சிங் தீர்மானித்துள்ளார். ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று இரவு டெல்லி திரும்புகிறார்.
மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை அவரது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆ.ராசா கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment