ஊழல் புரிபவர்களும் ஊழலும் என்றுமே காங்கிரஸ் கட்சிக்கு எதிரிகள் என்பதை மீண்டும் ஒரு முறை அன்னை சோனியா அவர்கள் தெரிவு படுத்தி இருக்கிறார். மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவானின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, புதிய முதல்வராக மத்திய அமைச்சராக இருந்த பிருதிவிராஜ் சவான் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி மேலிட விசுவாசியான இவர், இன்று பதவியேற்கிறார். அடுத்த மாற்றமாக, துணை முதல்வராக பவார் உறவினர் அஜித் பதவியேற்கிறார்.
மகாராஷ்டிரா மும்பையில் கொலபா கடற்படை தளம் அருகே, 30 தளங்களைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது. "ஆதர்ஷ்' என்ற பெயர் கொண்ட இந்த அடுக்கு மாடி குடியிருப்பு, கார்கில் போரில் உயிர் நீத்தவர்களின் மனைவிகள் மற்றும் போரில் சாகசம் செய்தவர்களுக்காக கட்டப்பட்டது. ஆனால், இந்த குடியிருப்பில் அரசியல்வாதிகளும், ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தங்களின் உறவினர்கள் பெயரில் வீடுகளை வாங்கினர். மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானும், தனதுமாமியார் மற்றும் மைத்துனிகள் பெயரில் வீடுகள் வாங்கினார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. பெருமளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. விவகாரம் விஸ்வரூபமானதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த அசோக் சவான், தன் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இருந்தாலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு, அசோக் சவானின் ராஜினாமா மீது காங்கிரஸ் மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அதிபர் ஒபாமா தன் இந்திய பயணத்தை முடித்து, நேற்றுமுன்தினம், இந்தோனேசியா சென்றதும், அசோக் சவானின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. அசோக் சவான் ராஜினாமாவைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்புக்கு விடையாக, மத்திய அரசில் பிரதமர் அலுவலக இணை அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகவும் உள்ள பிருதிவிராஜ் சவான், புதிய முதல்வராக பதவியேற்பார் என, அறிவிக்கப்பட்டது.
சோனியா முடிவு: இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி கூறுகையில், ""மத்திய அமைச்சர் பிருதிவிராஜ் சவானை, மகாராஷ்டிர சட்டசபை கட்சித்தலைவராக (முதல்வராக) காங்கிரஸ் தலைவர் சோனியா தேர்வு செய்துள்ளார். புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை, மகாராஷ்டிர காங்கிரஸ் சட்டசபை கட்சி சோனியாவுக்கு அளித்தது. இதையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்,'' என்றார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானவுடன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிருதிவிராஜ் சவான், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை அளித்தார். அதற்கு முன், கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்தார்.
கட்சி மேலிடத்தின் விசுவாசியான அவர், நிருபர்களிடம் கூறியதாவது: புதிய பொறுப்பை எனக்கு அளித்த காங்கிரஸ் தலைமைக்கு நான் மிகுந்த நன்றிக் கடன்பட்டுள்ளேன். மிகுந்த பணிவுடன், இதை ஏற்றுக்கொள்கிறேன். மகாராஷ்டிராவுக்கு தலைமை வகிப்பது மிகப்பெரிய பொறுப்பு. என்னால் முடிந்தவரை, பணியை சிறப்பாகச் செய்வேன். காங்கிரசில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்துச் செல்வேன். மாநிலத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு சுமுகமாக செயல்படும். பிரபலமான மாநிலமாக மகாராஷ்டிராவை மாற்றுவேன். கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இது தொடர்பாகப் பேசுவேன். தேசியவாதகாங்கிரஸ் தலைமையுடன் எனக்கு நல்ல உறவு இல்லை என்று கூறுவது சரியல்ல.இவ்வாறு சவான் கூறினார்.
சவான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், ""சவான் முதல்வர் பதவிக்கு சரியான நபரே. அவர் பாரபட்சமின்றி செயல்படுவார். கூட்டணி அரசு சுமுகமாக செயல்படும்,'' என்றார். முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பிருதிவிராஜ் சவான், நேற்று மாலை மும்பை வந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சித் தலைவருடன் கவர்னரை சந்தித்துப் பேசினார். அவர், இன்று மாலை 4 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார்.
பிருதிவிராஜ் சவான், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகம் வசிக்கும் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர். சரத் பவாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ள மேற்கு மகாராஷ்டிராவின் கராத்மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் இன்ஜினியராக இருந்த பிருதிவிராஜ் சவான், தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். இனிமேல் தான் அவர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆக வேண்டும். ராஜிவ் தூண்டுதலின் பேரில் அரசியலுக்கு வந்தார். பிட்ஸ் பிலானியில் இளங்கலை பட்டமும், கலிபோர்னியா பல்கலையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். சவானின் தந்தை அனந்தராவ் சவானும், காங்கிரஸ் கட்சியில் இருந்தவரே. அதே சமயம், ஏற்கனவே துணை முதல்வராக இருந்த சகன்பூஜ்பாலுக்கு பதிலாக, மத்திய அமைச்சர் பவார் உறவினர் அஜித் பதவியேற்கிறார். காங்கிரஸ் மேலிடம் தனக்கு வேண்டியவரை முதல்வராக்கியது போல, சரத்பவாரும் தன் நம்பிக்கைக்குரியவரை துணை முதல்வராக்கி அடுத்த மாற்றத்திற்கு வழிகண்டிருக்கிறார். இருவரும் இன்று மாலை பதவி யேற்கின்றனர்.
சொந்த ஊரில் கொண்டாட்டம்: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பிருதிவிராஜ் சவான் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரின் சொந்த ஊர் மக்கள், அதை தீபாவளி போல மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சவானின் சொந்த ஊர் கராத் நகரில் இருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ள கும்பர்கோ கிராமம். சவானின் உறவினர்கள் பலர் இன்னும் அங்கு வசிக்கின்றனர். அடுத்த முதல்வர் பிருதிவிராஜ் சவான் என்ற அறிவிப்பு வெளியானவுடன் கும்பர்கோ கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு கொண்டாட்டங்கள் களைகட்டின. ""தீபாவளிக்கு சில நாட்கள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், எங்கள் கிராமத்தவர்களுக்குதீபாவளி கொண்டாட்டங்கள் நீட்டிக்கப்பட்டது போல உள்ளது. எங்கள் கிராமத்தினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,'' என, கும்பர்கோ கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
பவார் மருமகன் அஜித் பவார் துணை முதல்வராவது ஏன்? மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவான் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் புதிய முதல்வராக, மத்திய அமைச்சராக இருந்த பிருதிவிராஜ் சவான் நேற்று நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில துணை முதல்வர் சகன் பூஜ்பாலும் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அஜித்பவார் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். இவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மருமகன். புதிய துணை முதல்வர் பற்றிய அறிவிப்பு, நேற்று நடந்த தேசியவாத காங்கிரஸ் சட்டசபை கட்சி கூட்டத்திற்குப் பின் வெளியானது. அஜித் பவார் பெயரை துணை முதல்வர் பதவிக்கு சகன் பூஜ்பால் முன்மொழிந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல் வழிமொழிந்துள்ளார். இதன் பின், காங்கிரஸ் மற்றும் தேசியவாதகாங்கிரஸ் தலைவர்கள், மாநில கவர்னர் சங்கரநாராயணனை சந்தித்து, புதியஅரசு அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். புதிய துணை முதல்வராகும் அஜித் பவார், உள்துறை மற்றும் எரிசக்தித் துறைகளை கவனிப்பார்
No comments:
Post a Comment