Thursday, November 11, 2010

அன்னை சோனியா - கடந்த கால கசப்புகளுக்கு ஜெயலலிதா வருத்தம்


அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று டைம்ஸ் நவ் தொலை காட்சிக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. இதுபற்றி முதல் முதலில் குரல் கொடுத்த தலைவர் நான்தான். இந்த ஊழல் காரணமாக நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் முழுமையாக உணர்ந்து உள்ளனர். அடிமட்டத்து சாதாரண மக்களுக்கு கூட இதுபற்றி தெரிந்து இருக்கிறது. எல்லோரும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேட்கிறார்கள்.
பிரதமரால் இந்த பிரச்சினையில் முடிவு எடுக்க இயலவில்லை. அதற்கு காரணம் அரசியல் ரீதியான கூட்டணிதான்.
இதில் நடவடிக்கை எடுத்தால் தி.மு.க. மத்திய மந்திரி சபையில் இருந்து விலகும் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதுகிறார்கள்.
ஆனால் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கா விட்டால் காங்கிரஸ் மீது மக்களுக்கு மதிப்பு குறையும்.
நான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் சொல்கிறேன், காங்கிரஸ் இந்த விசயத்தில் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜாவை மத்திய மந்திரி சபையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இதன் காரணமாக தி.மு.க. விலகும் பட்சத்தில் ஆட்சி கவிழாமல் இருக்க காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. கூட்டணி ஆட்சி நிச்சயமாக கவிழாது. நாடும் புதிதாக தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
காங்கிரஸ் இந்த விஷயத்தில் தயக்கமோ பயமோ படக்கூடாது. ராஜா தானாக மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். தி.மு.க.வும் அவரை ராஜினாமா செய்யும்படி சொல்லாது. எனவே காங்கிரஸ் தன் நம்பகதன்மையை உறுதிப்படுத்த வேண்டுமானால் மத்திய மந்திரி சபையில் இருந்து ராஜாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
தி.மு.க.வுக்கு தற்போது பாராளுமன்றத்தில் 18 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகினால் காங்கிரஸ் அரசு நீடிக்க 18 எம்.பி.க்கள் தேவை. எங்களிடம் (அ.தி.மு.க.) 9 எம்.பி.க்கள் உள்ளனர்.
இது தவிர மற்ற மாநில கட்சிகளில் உள்ள 10 எம்.பி.க்களின் ஆதரவை என்னால் பெற்றுக் கொடுக்க முடியும். இதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னால் இந்த ஆதரவை திரட்டி கொடுக்க முடியும். நான் சொல்லும் மாநில கட்சிகள் எவை எவை என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது.
காங்கிரஸ் ஆட்சி நீடிக்க அ.தி.மு.க. கொடுக்கும் ஆதரவுக்கு நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். மந்திரி பதவியும் கேட்க மாட்டோம். இந்த முறைகேடு வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த முடிவை எடுத்து உள்ளோம்.
அ.தி.மு.க. தொடங்கி 38 ஆண்டுகள் ஆகிறது. அரசியலில் ஏற்றத்தாழ்வுகளை நான் பார்த்து விட்டேன். பின்னோக்கி பார்த்தால் முன்னோக்கி போக முடியாது.
சோனியா பற்றி கடந்த காலத்தில் நடந்த விமர்சனம் முடிந்ததாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும். வலுவான பாதுகாப்பு மிகுந்த இந்தியா உருவாக வேண்டும் என்பதே எங்களது இலக்கு.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment