போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஜி.கே.வாசன்: விமானத்தைப் பிடிக்க பைக்கில் பறந்தார்!
வெள்ளி 5, பிப்ரவரி 2010 5:18:39 PM (IST)
திருச்சி வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து விமானத்தைப் பிடிப்பதற்காக கட்சிக்காரருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி விமான நிலையம் விரைந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மகள் திருமணம் திருச்சி கலைஞர் அறிவலாயத்தில் இன்று காலை நடந்தது. ஜி.கே.வாசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பிறகு கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்ற வாசன் அங்கு ஒரு திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
திருவானைக்காவல் காவேரி பாலம், கல்லணை சாலை வழியாக திருச்சி- சென்னை பைபாஸ் ரோட்டில் பால்பண்ணை ரவுண்டானா அருகில் கார் வந்த போது அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருந்தன.
இந்த போக்குவரத்து நெருக்கடியில் வாசன் காரும் சிக்கிக்கொண்டது. போக்குவரத்து நெரிசலை சரி செய்த பிறகு காரில் சென்றால் விமானத்தை பிடிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து காரிலிருந்து இறங்கிய வாசன், திருச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜராஜசோழனின் மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிள், விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.
வாசன் திடீரென மோட்டார் சைக்கிளில் செல்வதைப் பார்த்ததால் மக்களும் சரி, கட்சியினரும் சரி பரபரப்படைந்தனர். வாசன் பைக்கை கட்சிக்காரர்களும் பிந் தொடர்ந்து பைக்குகளில் பறந்தனர். போலீஸாரும் உடன் விரைந்தனர். இதனால் அந்த சாலையே பரபரப்பாகி விட்டது. டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக சென்று ஜி.கே.வாசனை குறித்த நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு தான் காங்கிரஸ் நிர்வாகிகள் நிம்மதி பெமூச்சு விட்டனர்.
முக்கியமான அரசியல் தலைவர்கள் இதுபோல சாதாரணமான சவாரிகளை மேற்கொள்வதெல்லாம் தமிழகத்தில் அத்தி பூத்தாற் போல நடக்கும் நிகழ்வு என்பதால் மக்களும் வாசன் பைக்கில் செல்வதை வேடிக்கை பார்த்தனர்
No comments:
Post a Comment