தலையங்கம்: நவீன "நீரோ'க்கள்!
First Published : 07 Dec 2010 03:01:14 AM IST
Last Updated :
கட்சிகள் எதுவாக இருந்தாலும், நமது அரசியல் தலைவர்களின் மனப்போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருமே ஒன்றுபோல சராசரி இந்தியனின், சாமானிய மக்களின் நிலை அறியாதவர்களாக, தங்களது பதவியின் பகட்டை வெளிக்காட்டுவதில் மோகமுடையவர்களாக இருக்கிறார்களே தவிர, பொதுவாழ்க்கையில் தான் ஒரு முன்னுதாரணமாக இருந்து காட்டவேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையைத் தருகிறது.கட்சி மாநாடுகளை இவர்கள் பலகோடி ரூபாய்கள் செலவழித்து பிரம்மாண்டமாக நடத்திக்காட்டுவது, தங்களது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்த என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால், தங்களது வாரிசுகளின் திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்திக் காட்டி, தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம்போட நமது அரசியல் தலைவர்கள் ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதுதான் புதிராக இருக்கிறது.சமீபத்தில், முகம் சுளிக்கவைத்த படாடோப அரசியல் திருமணம் நாகபுரியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்கரியின் மகனுடையது. விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம் திருமண வரவேற்புக்காக அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தால், ஏதோ கோடீஸ்வரர் வீட்டுத் திருமணம் போலிருக்கிறது என்கிற பிரமிப்பை ஏற்படுத்தியது. வண்ண விளக்குகளால் அந்தப் பகுதி முழுவதும் சினிமாவில் வரும் கனவுக் காட்சிபோல ஜோடிக்கப்பட்டிருந்ததே, இதெல்லாம் எங்கே தெரியுமா? மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதி என்று அறியப்படும் விதர்பாவில். அந்த மாநிலத்திலேயே மிக மோசமான மின்வெட்டு நிலவுவது இந்தப் பகுதியில்தான். அங்கேதான் இத்தனை ஆர்ப்பாட்டமாக இப்படியொரு திருமண வரவேற்பு நடந்து முடிந்திருக்கிறது.ஒரு மாதம் முன்பு, மதுரையில் நடந்த மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சரும் தமிழக முதல்வரின் மூத்த மகனுமான மு.க.அழகிரி வீட்டுத் திருமணம் எந்த விதத்தில் குறைந்தது? மதுரையில் முதல்வர் குடும்பத்துத் திருமணத்தைப் பலரும் 1995-ல் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்துடன் ஒப்பிட்டுப் பெருமூச்சு விட்டதில் தவறில்லை. அந்தத் திருமணத்தில் ஜெயலலிதாவும் தோழி சசிகலாவும் சர்வாலங்காரபூஷிதைகளாக வைரத்தால் அலங்கரித்துக்கொண்டு வலம்வந்தனர். முதல்வர் குடும்பத்துத் திருமணத்தில், குடும்பம் ரொம்பப் பெரிது என்பதால், பலர் வைரமும், வைடூரியமும் பளபளக்க வலம் வந்தனர். அதுவும் முகம் சுளிக்க வைத்தது. இதுவும் முகம் சுளிக்க வைத்தது.சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் பிரபுல் படேல் வீட்டுத் திருமணமும் இதேபோலத்தான், திரைப்படத் திருமணங்களும் கோடீஸ்வரர், தொழிலதிபர்கள் வீட்டுத் திருமணமும் தோற்றுவிடும்படியாக, பிரம்மாண்டமாக நடந்தேறியது. அதற்காக சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டுத் திருமணம்போல எல்லாப் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக சிறப்பு மலர்களை வெளியிட்டு அந்தப் படாடோபத்தை வாழ்த்தி வரவேற்று, அதில் தாங்களும் வருமானம் ஈட்டின.கடந்த 20 ஆண்டுகளில் நடந்த அரசியல் திருமணங்களையும், அதற்கு முன்னால் நடந்த அரசியல் திருமணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் வேறுபாடு தெரிகிறதே. பண்டித நேருவின் குடும்பத்தையே எடுத்துக் கொள்வோம். பணத்துக்குப் பஞ்சமா, பதவி அதிகாரத்துக்குப் பஞ்சமா, தொண்டர் கூட்டத்துக்குப் பஞ்சமா? மார்ச் 26, 1942-ல் அலாகாபாத் ஆனந்தபவனில் நடந்த பெரோஸ்காந்தி - இந்திராவின் திருமணம் ஆனாலும், பிப்ரவரி 25, 1968-ல் புதுதில்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டில் நடந்த ராஜீவ்காந்தி-சோனியா திருமணம் ஆனாலும் எளிமையாக மிகவும் நெருங்கிய நண்பர்களை அழைத்துத்தான் நடத்தப்பட்டன. 1974-ம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று சஞ்சய்காந்தி-மேனகாவை மணந்தது மட்டுமென்ன? பண்டித ஜவாஹர்லால் நேரு சிறையில் இருக்கும்போது ராட்டையில் நூற்ற நூலிலிருந்து நெய்யப்பட்ட கதர் சேலையைத்தான் மேனகாவுக்கு அணிவித்து மணப்பெண்ணாகச் சிங்காரித்தார் அன்றைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி.சர்வ வல்லமை படைத்த பிரதமராக இந்திராகாந்தி இருந்த நேரம் அது. அவர் ஒரு திருமண வரவேற்பு நடத்தியிருந்தால், உலகத் தலைவர்கள் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு வந்திருப்பார்கள். ஆனால், எளிமையாகத் திருமணம் நடத்தியது மட்டுமல்ல, இப்படிச் செய்வதன் மூலம் திருமணங்களில் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிற செய்தியையும் தேசத்துக்கு மறைமுகமாக விடுத்தார் இந்திரா காந்தி அம்மையார்.அதெல்லாம் ஏன்? தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா நினைத்திருந்தால், தனது வளர்ப்பு மகனுக்குத் தான் முதல்வராக இருக்கும்போது திருமணம் செய்து பார்த்திருக்க முடியாதா? தமக்கு உடல்நலம் சரியில்லை என்றபோதும் கூட, பதவியைப் பயன்படுத்தி பிரம்மாண்டமாகத் திருமணம் நடத்துவதை அவர் விரும்பவில்லையே...ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் எத்தனை கோடிப்பேர் நமது இந்தியாவில்? பெண்களைப் பெற்றுவிட்டு அவர்களைக் கரையேற்ற வழியில்லாமல் தவிக்கும் பெற்றோர் எத்தனை எத்தனை பேர்? திருமணங்களை ஆடம்பரமாக நடத்தி, வீண் விரயம் செய்யக்கூடாது என்று வழிகாட்ட வேண்டியவர்கள், எளிமையாக வாழ்ந்துகாட்ட வேண்டியவர்கள் தங்களது செல்வத்தையும் செல்வாக்கையும் பதவியையும் பகட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் போட்டி போடுகிறார்களே இந்த முட்டாள் தனத்தை நாம் என்னவென்று சொல்வது?இன்றைய இந்தியாவில், இவர்களெல்லாம்தான் சாமானியர்கள். இவர்களெல்லாம்தான் மக்கள் பிரதிநிதிகள்... இவர்களெல்லாம்தான் பொது வாழ்க்கைக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்...காந்தி மகான் பிறந்த தேசமா இது? ஹே....ராம்...!
No comments:
Post a Comment