காங்., தலைவர் சோனியா, கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்குச் சென்று புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் ஓரிரு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உரையாற்றவில்லை. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, ஊழலை ஒழிக்க வழி செய்யும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். "பார்லிமென்டில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை' எனக் கூறி, சமீபத்தில் ஹிசார் லோக்சபா தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார். குளிர்கால கூட்டத்தொடரில், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படா விட்டால், நடைபெற உள்ள உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக சமீபத்தில் மவுன விரதத்தை முடித்துக் கொண்ட அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர், குறிப்பாக திக்விஜய் சிங் காரசாரமாக பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் கவுச்சார் பகுதியில், ரிஷிகேஷ் - கரன்பிரயாக் இடையிலான ரயில்வே திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காய்ச்சல் காரணமாக, சோனியா கடைசி நேரத்தில் இந்த விழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, சோனியாவின் உரையை கேட்க இப்பகுதி மக்கள் ஆர்வமாக இருந்தனர். அவர் வராவிட்டாலும் அவரது உரையை, ராணுவ அமைச்சர் அந்தோணி வாசித்தார்.
ஊழல் விவகாரத்தில், தன் மவுனத்தை கலைக்கும் விதமாக சோனியா அதில் கூறியிருந்ததாவது: சமீப காலமாக ஊழல் குறித்த பேச்சுக்கள் அதிகரித்துவிட்டன. ஊழல் ஒரு பெரிய நோய் தான். அதில் சந்தேகமேயில்லை. இதில், பலர் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உண்மை தான். ஊழலைப் பற்றி பேசிக் கொண்டேயிருந்தால், ஊழலை ஒழித்து விட முடியாது. அதற்குரிய சூழல் உருவாக வேண்டும். ஊழல், ஊழல் என்று மற்றவரை சுட்டிக் காட்டினால், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஊழல் குறித்து ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். "மற்றவர்கள் அளவுக்கு நான் ஊழல் செய்யவில்லை' என்ற அளவில் தான் தற்போதைய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
ஊழல் குறித்து கூச்சல் போடுபவர்களை பார்த்து கேட்கிறேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது யார்? அதை நாங்கள் தான் கொண்டு வந்தோம். பிரதமரால் அமைக்கப்பட்ட தேசிய ஆலோசனை கவுன்சிலில் நானும் இருக்கிறேன். லோக்பால் மசோதா குறித்த மாதிரி, இந்த கவுன்சிலில் தான் உருவாக்கப்பட்டது. பிரதமரும், மத்திய அரசும் லோக்பால் மசோதாவை கொண்டு வருவது குறித்து உறுதியளித்துள்ளனர். அதற்கு பிறகும் ஏன் வெற்று கூச்சல் தொடருகிறது? விலைவாசி உயர்வு, பணவீக்கம் உயர்வு என்பதெல்லாம் கவலையளிக்கிறது. உண்மை தான். இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் புரிகிறது. எல்லாரும் அரசியல் நடத்தலாம். ஆனால், மக்களை பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும். மக்களுக்காக எதையாவது செய்யத்தான் வேண்டும். இவ்வாறு சோனியா கூறியுள்ளார். உத்தரகண்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்னோட்ட பிரசாரமாக, சோனியாவின் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் வராததால், காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
No comments:
Post a Comment