Monday, January 17, 2011

கடல் கொள்ளையைத் தடுக்க புதிய சட்டம்: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்



கடல் கொள்ளை சம்பவங்களைத் தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டில் 12 இந்திய சரக்கு கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. அதில் பணியாற்றிய மாலுமிகள், ஊழியர்கள் உள்பட 174 இந்தியர்களும் கடத்தப்பட்டனர். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள உலகளாவிய அளவில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் ஓர் அங்கமான சர்வதேச கடல் போக்குவரத்து கழகத்திடம் இப் பிரச்னை குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிழக்கு, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்ல ஏடன் வளைகுடாதான் முக்கியமான கடல்பாதை. இவ் வழியாக ஆண்டுக்கு 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்துச் செல்கின்றன. இந்தியாவிலிருந்து மாதந்தோறும் சுமார் 15 சரக்கு கப்பல்கள் கடந்துச் செல்கின்றன. இந்திய கடல்வழி வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 5.85 லட்சம் கோடி. இதில் 45 சதவீத வர்த்தகப் போக்குவரத்து ஏடன் வளைகுடா வழியாகவே நடைபெறுகிறது. இதை தவிர்த்து மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமென்றால் "நன்னம்பிக்கை முனை' வழியாகச் செல்ல வேண்டும். இவ் வழியாகச் சென்றால் பயண காலம் 3 வாரங்கள் வரை கூடுதலாகும். மேலும், இந்த வழி அவ்வளவு பாதுகாப்பானதும் அல்ல. எனவே, ஏடன் வளைகுடா வழியாகச் செல்வதே சிக்கனமானது, சிறந்ததும்கூட. ஆனால், இந்தப் பகுதியில் அண்மைக்காலமாக கடல் கொள்ளைச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. இதை தடுக்க இந்திய கடற்படை சார்பில் அங்கு ஒரு போர்க்கப்பல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்போது, மேலும் ஒரு போர்க்கப்பலை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சரக்கு கப்பல்களுக்குப் பாதுகாப்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 போர்க்கப்பல்கள் அங்கு முகாமிட்டுள்ளன. அந்த போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படையும் இணைந்து செயல்படுகிறது. கடல் கொள்ளையைத் தடுக்க இந்தியா சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது என்று அமைச்சர் வாசன் தெரிவித்தார். ஏடன் வளைகுடா வழியாகச் செல்லும் இந்திய கப்பல்களுக்கு ஏற்கெனவே பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடற்கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமுள்ள சலாலா எல்லைக்கோட்டை ஒட்டி செல்ல வேண்டாம் என்று அனைத்து சரக்கு கப்பல் மாலுமிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஏடன் வளைகுடாவில் ரோந்து சுற்றி வரும் இந்திய போர்க்கப்பலுடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment